
நாட்டிற்குத் தேவையான அழுத்தமான அரசியல் மாற்றத்தை இந்தியா கூட்டணி வழங்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஆக. 30) நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், 28 கட்சிகளைச் சேர்ந்த 63 பிரதிநிதிகள் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 என இரு நாள்களுக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் அழுத்தமான அரசியல் மாற்றத்தை இந்தியா கூட்டணி வழங்கும். இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படாது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை. இக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அஜித் பவார் மற்றும் அவருடன் சில எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாட் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியுடன் இணைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி யார் பக்கம் என்று தெரியவில்லை. அவர் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா கூட்டணியில் வெவ்வேறு கொள்கையுடைய கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்றுதான். பிரதமர் வேட்பாளருக்கு எங்களின் நிறைய தகுதியுடையவர்கள் உள்ளனர். ஆனால், பாஜகவுக்கு ஒருவரை விட்டால் வேறு ஆள் கிடையாது எனக் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...