அதிகரிக்கும் யுபிஐ மோசடி: செய்யக்கூடாதவை என்ன?

யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களிடம் நடத்தப்படும் மோசடி நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
அதிகரிக்கும் யுபிஐ மோசடி: செய்யக்கூடாதவை என்ன?

யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களிடம் நடத்தப்படும் மோசடி நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் எண்ம(டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை முதல் நகைக் கடைகள் வரை ஜி-பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 8,300 கோடி முறை ரூ. 1.39 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யுபிஐ செயலி வைத்திருப்பவர்களை இலக்காக வைத்து நடத்தப்படும் சைபர் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

யுபிஐ செயலிகளை பொறுத்தவரை பணத்தை வேறு நபருக்கு பரிமாற்றம் செய்ய நான்கு அல்லது ஆறு இலக்கு கடவு எண்களை பதிவிட்டாலே போதும்.

இதனை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பல்வேறு விதமாக மோசடிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் தரவுகளின்படி, கடந்த 2022-இல் மட்டும் யுபிஐ பணப்பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக 95,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் அதிகளவிலான பணத்தை இழந்தவர்களாகதான் இருக்கக்கூடும்.

மோசடி செய்யும் முறைகள்

ஒரு நபரின் செல்போன் எண்ணுக்கு, ‘நீங்கள் செல்போன் மின்சார கட்டணம் உடனடியாக கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டித்து அபராதம் விதிக்கப்படும், உடனடியாக கட்டணத்தை கட்டுவதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்’ போன்ற பதற்றமடைய வைக்கும் மெசேஜ் அனுப்பப்படுகிறது.

இதேபோன்று, செல்போன் கட்டணம், வரிக் கட்டணம் போன்ற பல்வேறு விதமான மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது.

இந்த மெஜேஜை பார்த்தவுடன் சிலர் கவனமடைந்து அதனை கிளிக் செய்யாமல் கடந்து சென்றுவிடுகின்றனர். ஆனால், சிலர் பதற்றமடைந்து உடனடியாக லிங்க்கை கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட தொகை மோசடி செய்யப்படுகிறது.

மேலும், பலருக்கு நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், உங்களுக்கு மாதமாதம் அதிக வட்டி வழங்கப்படும் என்று மெசேஜ் அனுப்பப்படுகிறது.

அதிக வட்டியின் ஆசை காரணமாக கிளிக் செய்து யுபிஐ கடவுச் சொல்லை பதிவிட்ட பிறகே மோசடி செய்யப்பட்டதை உணர்கிறார்கள்.

அதேபோல், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு நபர் பின்தொடர்பவரின் பட்டியலை எடுத்து, அந்த நபரின் பெயரை பயன்படுத்தி அவரின் சமூக வலைதள நண்பர்களிடம் அவசர உதவியாக பணம் அனுப்பும்படி மெசேஜ் அனுப்பி மோசடி செய்யப்படுகிறது.

இதுபோன்ற மோசடி பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அவர்களின் நண்பர்களிடம்கூட நடைபெற்றுள்ளது.

மோசடியை தவிர்ப்பது எப்படி?

இதுபோன்ற மோசடிகளை அடிப்படையான சில செயல்கள் மூலம் எளிதில் தவிர்த்து விடலாம். முதலில், தங்களின் வங்கிக் கணக்கு, யுபிஐ செயலிகளின் கடவுச் சொற்கள் போன்ற தனிப்பட்ட தரவுகளை யாரிடமும் கொடுக்கக்கூடாது.

மேலும், தேவையில்லாத மெசேஜ்களில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யக்கூடாது. அதிகாரப்பூர்வமற்ற எந்த வலைதளத்திலும் தனிப்பட்ட தரவுகளை பதிவிடக்கூடாது.

அதேபோல், யுபிஐ செயலிகள் மூலம் நண்பர்கள் பணஉதவி கேட்டால், தனிப்பட்ட முறையில் அவர்களிடம் உறுதி செய்து கொண்ட பிறகே பணம் அனுப்ப வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளில் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்யும் தொகையானது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு செய்து வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com