பெண் மருத்துவர் தற்கொலைக் கடிதத்தில் பெயரைக் குறிப்பிடவில்லையா? 

பெண் மருத்துவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில், ரூவைஸின் பெயர் கூறப்பட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
பெண் மருத்துவர் ஷஹானா | டிஎன்ஐஇ
பெண் மருத்துவர் ஷஹானா | டிஎன்ஐஇ

திருவனந்தபுரம்: வரதட்சணை காரணமாக திருமணம் நின்றதால், கேரளத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில், ரூவைஸின் பெயர் கூறப்பட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், அவர்களது வரதட்சணை ஆசையால் எனது வாழ்க்கை முடியப்போகிறது. அவரது சகோதரிக்காகத்தான் எங்களிடம் இந்த அளவுக்கு வரதட்சணை கேட்கிறார்களோ? அவர்களுக்கு ஏன் மேலும் இவ்வளவு சொத்து? மனிதர்களுக்கும் அன்புக்கும் எந்த மதிப்பும் இல்லையா? என ஷஹானா அடுக்கடுக்கான கேள்விகளை கடிதத்தில் எழுப்பியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகுதான் ரூவைஸ் குடும்பத்தினர் வரதட்சணை பற்றி பேசவே தொடங்கியதாக ஷஹானாவின் சகோதரர் சசீம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், தனது தங்கை ஷஹானாவுக்கும் ரூவைசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகுதான், அவர்கள் வரதட்சிணைப் பற்றி பேசவே தொடங்கினார்கள். இதனால் எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தோம்.

முதலில், எங்களால் முடிந்ததை நாங்கள் திருமணத்துக்கு அளிக்கிறோம். அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினோம். ஆனால், திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், ரூவைஸின் தந்தை, வரதட்சிணையாக என்னென்ன வேண்டும் என்பதை பட்டியலிடத் தொடங்கினார். அவர்கள் சொல்வதை எல்லாம் செய்துகொடுக்கும்படி ரூவைஸும் எனது தங்கையிடம் கட்டயமாகக் கூறிவிட்டார். இதனால், அவர்கள் பண ஆசைப் பிடித்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டு, படிப்பில் கவனம் செலுத்துமாறு எனது தங்கையிடம் கூறினேன்.

ஆனால், அவளால் ரூவைஸை மறக்க முடியாமல், அதிலிருந்து வெளியேற அவர் சிகிச்சை பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டார் என்கிறார்.

இறுதியாக, அவர்கள் கேட்ட வரதட்சிணையை எங்களால் கொடுக்க முடியாது என்று தெரிந்துகொண்டதும், அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள். அதன்பிறகும் எனது தங்கை ரூவைஸுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பினால். தன்னால் இந்த துயரத்தைத் தாங்க முடியவில்லை என்றும், எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப்போவதாகவும் கூறியிருந்தாள். இந்த தகவலை படித்ததும் ரூவைஸ் எனது தங்கையின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார். அதன்பிறகுதான் எனது தங்கை இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கவலையோடு கூறுகிறார்.

இந்த நிலையில், ஷஹானா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பை கைப்பட எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில் ரூவைஸ் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை மறுத்திருக்கும் காவல்துறையினர், அவர் தனது தற்கொலை கடிதத்தில், தனது கவலைகளைப் பற்றியும், சமூகத்தில் இருக்கும் வரதட்சணைக் கொடுமை பற்றியும்தான் எழுதியிருந்தார். மக்கள் எந்த அளவுக்கு பணப்பேய்களாக வாழ்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். மறைமுகமாக அவர் ரூவைஸை சுட்டிக்காட்டி பல குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். விசாரணையின்போதுதான், ரூவைஸ் ஷஹானாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, பிறகு வரதட்சணை விவகாரத்தால் திருமணம் நின்று போனது தெரிய வந்தது என்கிறார்கள் காவல்துறையினர்.

ரூவைஸ் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் இதுவரை எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூவைஸின் செல்போனை கைப்பற்றியிருக்கும் காவல்துறையினர், அதில் ஷஹானா அனுப்பி டெலீட் செய்யப்பட்ட தகவல்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
மருத்துவர் ஷஹானா தற்கொலை வழக்கில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரூவைஸ் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.  ரூவைஸின் தந்தை தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கில், ரூவைஸ் மட்டுமல்லாமல், அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரையும் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், அறுவைசிகிச்சைத் துறையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த ஷஹானா (26) நேற்று தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், அவரது முன்னாள் மணமகன் காவல்துறை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்த பெண் இனத்தையும் உலுக்கியிருக்கிறது மருத்துவர் ஷஹானாவின் தற்கொலை. கடந்த திங்கள்கிழமை இரவு, ஷஹானாவின் குடியிருப்பில் இருந்து உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. அவருக்கும் ரூவைஸுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வரதட்சிணை காரணமாக திருமணத்தில் சிக்கல் விழுந்தது. அது கடைசியில் திருமணத்தை நிறுத்தும் அளவுக்குச் சென்றதால் ஷஹானா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை இரவு, அவர் பணிக்கு வர வேண்டிய நிலையில், வராதால், உடன் பணியாற்றுவோர் அவரை செல்போனில் அழைத்தபோது, அவர் போனை எடுக்கவில்லை. உடனடியாக அவரது நண்பர்கள் அவரது குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, அது உள்பக்கமாக பூட்டியிருந்த நிலையில், அவர் கதவையும் திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. கதவை உடைத்து உள்ளே சென்ற நண்பர்கள், உயிரற்ற உடலைத்தான் மீட்டனர்.

அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். அனைவரின் கவனமும் பணத்தின் மீதே இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஏன் ரூவைஸ் குடும்பத்தினர் இவ்வளவு அதிகமான வரதட்சிணையைக் கேட்டார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஷஹானா, ஒருவேளை அது அனைத்தும் அவரது சகோதரிக்குக் கொடுப்பதற்காக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது என்றும் எழுதியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ரூவைஸ் மீது கடுமையான நடவடிக்கை பாய்ந்திருக்கிறது, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ஷஹானா தற்கொலையை வரதட்சிணை தொடர்பான வழக்காக மாற்றி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருப்பதோடு, ரூவைஸ் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

150 சவரன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவை ரூவைஸ் குடும்பத்தினர் கேட்டிருந்ததாகவும், மேலும் வரதட்சிணையை அதிகரித்தபோதுதான் திருமணம் நின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com