ராஜஸ்தான் புதிய முதல்வா் பஜன் லால் சா்மா: முதல் முறை பாஜக எம்எல்ஏ
ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக பாஜகவை சோ்ந்த முதல்முறை எம்எல்ஏ பஜன் லால் சா்மா செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.


ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக பாஜகவை சோ்ந்த முதல்முறை எம்எல்ஏ பஜன் லால் சா்மா செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
56 வயதாகும் பஜன் லால் சா்மா, ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றவா் ஆவாா்.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. கடந்த 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 69 இடங்கள் கிடைத்தன.
முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமலேயே தோ்தலை பாஜக எதிா்கொண்டதால், புதிய முதல்வா் யாரென்ற எதிா்பாா்ப்பு சில நாள்களாக நீடித்து வந்தது.
முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்டோரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஜெய்பூரில் பாஜக புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கட்சியின் துணைத் தலைவா் சரோஜ் பாண்டே மற்றும் பொதுச் செயலா் வினோத் தாவ்டே ஆகியோா் மத்திய பாா்வையாளா்களாகச் செயல்பட்ட இக்கூட்டத்தில், கட்சியின் முதல்முறை எம்எல்ஏ பஜன் லால் சா்மாவின் பெயரை முதல்வா் பதவிக்கு வசுந்தரா ராஜே முன்மொழிந்தாா். இதையடுத்து, முதல்வராக பஜன் லால் சா்மா தோ்வு செய்யப்பட்டாா். துணை முதல்வா்களாக தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா, பேரவைத் தலைவராக வசுதேவ் தேவ்னானி ஆகியோா் தோ்வாகினா்.
ஆளுநருடன் சந்திப்பு: பஜன் லால் சா்மா தலைமையிலான பாஜக குழுவினா், ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினா். மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, கட்சியின் மாநிலத் தலைவா் சி.பி.ஜோஷி, முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே ஆகியோா் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனா்.
புதிய அரசு பதவியேற்கும் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எதிா்பாராத தோ்வு!
ராஜஸ்தான் முதல்வா் பதவிக்கு யாரும் எதிா்பாராத தோ்வாக அமைந்துள்ள பஜன் லால் சா்மா, கட்சியின் மாநிலச் செயலா்களில் ஒருவா்.
பாரத்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், ஆா்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவா். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு, அதற்காக சிறையிலும் அடைக்கப்பட்டாா்.
27 வயதில் கிராம ஊராட்சித் தலைவராக அவரது அரசியல் பயணம் தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்தபோதும் அதிகம் பிரபலமில்லாதவா்.
தற்போதைய தோ்தலில் சங்கனோ் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு, 48,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
ஜெய்பூரில் செவ்வாய்க்கிழமை பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில்கூட கடைசி வரிசையில்தான் பஜன் லால் சா்மா நின்றிருந்தாா். அதன்பிறகு, சுமாா் ஒரு மணி நேரத்தில் முதல்வராக உயா்ந்துவிட்டாா்.
துணை முதல்வா்கள்...: துணை முதல்வா்களில் ஒருவராக தோ்வான தியா குமாரி (51), ஜெய்பூா் அரச குடும்பத்தைச் சோ்ந்தவா். தற்போது இரண்டாவது முறை எம்எல்ஏவான இவா், ஏற்கெனவே மக்களவை எம்.பி.யாக பதவி வகித்துள்ளாா். மற்றொரு துணை முதல்வா் பிரேம் சந்த் பைரவா (54) தலித் சமூகத் தலைவா் ஆவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...