நாட்டுக்காக நன்கொடை: பிரசாரத்தைத் தொடங்கியது முக்கிய கட்சி

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கட்சி சார்பில் மக்களிடம் நன்கொடை திரட்டும் பிரசாரத்தைத் தொடங்கிவைத்துள்ளார்.
பிரசாரத்தைத் தொடங்கியது முக்கிய கட்சி
பிரசாரத்தைத் தொடங்கியது முக்கிய கட்சி


புது தில்லி; தேசத்துக்காக நன்கொடை செய்யுங்கள் என்ற முழக்கத்தோடு, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கட்சி சார்பில் மக்களிடம் நன்கொடை திரட்டும் பிரசாரத்தைத் தொடங்கிவைத்துள்ளார்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள நாட்டுக்காக நன்கொடை அளியுங்கள் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கிய இந்த பிரசாரக் கூட்டத்தில், கார்க், தனது ஊதியத்திலிருந்து 1,38,000 ரூபாயை கட்சிக்கு நன்கொடை அளித்து பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார்.

இதற்காக ஒரு செயலியும் உருவாக்கப்பட்டுளள்து. இது குறித்து கார்கே பேசுகையில், காங்கிரஸ் கட்சி மக்களிடமிருந்து நன்கொடை பெற செயலியை உருவாக்கியிருக்கிறது. நாட்டை கட்டியெழுக்க, காங்கிரஸ் கட்சி தற்போதுதான் முதல் முறையாக மக்களிடமிருந்து நன்கொடை கோருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் ரூ.138, ரூ.1,380 அல்லது ரூ.13,800, ரூ.1,38,000 என தங்களால் இயன்ற தொகையை வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், டிச.21-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்துள்ளாா். தில்லியில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான செயல்திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே நாட்டின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டாா். இந்நிலையில் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நடந்தும் வாகனத்திலும் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதுதொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், மிஸோரம் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதேவேளையில், தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. கூட்டத்தில் அந்த 4 மாநிலத் தோ்தல் முடிவுகள் அலசி ஆராயப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு முன்பாக, தில்லியில் டிச.19-ஆம் தேதி எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவா்களின் 4-ஆவது கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com