இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட தொழிலதிபர்கள் குறித்து அறிந்திருப்போம், ஆனால் அவர்களின் வாரிசுகள் குறித்து பலருக்குத் தெரியாது.
அவர்களில் பலர் வெளிநாடுகளில் படித்து தங்களது தந்தையின் தொழில் மேம்பாட்டுக்காகவும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இளம் தொழிலதிபர்களாகின்றனர்.
கல்வியை முடித்து தொழில் துறைக்குள் வந்த அவர்கள் திருமணம் என்ற புதிய உறவுக்கும் தகுதியானவர்களாக விளங்குகின்றனர். சினிமா பாணியில் சொல்ல வேண்டுமானால், தற்போதுவரை அவர்கள் ''சிங்கிள் பசங்களாகவே..'' உள்ளனர். அவர்களின் பட்டியலைக் காண்போம்..
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி சமீபத்தில் மருந்துகள் விற்பனைத் துறையின் கோலோச்சி வரும் குடும்பத்தைச் சேர்ந்த ராதிகா மெர்ச்சன்ட் என்பவருடன் திருமண நிச்சயம் செய்துகொண்டார். இதனால், இந்த பட்டியலிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்வைதேஷ் பிர்லா
பிர்லா குடும்பத்தின் இளமையும் துடிப்பும் கொண்ட உறுப்பினர் அத்வைதேஷ் பிர்லா. குமார் மங்களம் பிர்லாவின் மகள். ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் 'உஜ்ஜாஸ்' என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2021 முதல் அத்வைதேஷ் பிர்லா அந்நிறுவனத்தில் பங்காற்றி வருகிறார்.
ஜெய் அன்ஷுல் அம்பானி
அனில் அம்பானி - டீனா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஜெய் அன்ஷுல் அம்பானி. மும்பையிலுள்ள கேத்திட்ரல் மற்றும் ஜான் கேனான் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மை பிரிவில் படித்தார். தற்போது இவர், ரிலையன்ஸ் கேப்பிடல்ஸ் மற்றும் ரிலையன்ஸ் மியூட்சுவல் ஃபன்ட்ஸ் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
ஜீட் அதானி
செப்டம்பர் 2022ல் உலக பணக்காரர்கள் வரிசையில் முதன்மை இடம் பிடித்த கெளதம் அதானியின் இளைய மகன் ஜீட் அதானி. இவரின் மூத்த மகனான கரன் அதானி மகாராஷ்டிர பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு, துறைமுக பிரிவின் பிரதிநிதியாக உள்ளார். அதானி குழும விரிவாக்கத்தில் விரைவில் ஜீட் அதானியின் பங்களிப்பை எதிர்பார்க்கலாம்.
கவின் பார்தி மிட்டல்
மிட்டல் குடும்பத்தில் ஒரு இளம் தொழிலதிபர் கவின் பார்தி மிட்டல். இவர் பார்தி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் பார்தி மிட்டலின் மகனாவார். இவர் மற்ற தொழிலதிபர்களின் வாரிசுகளிடமிருந்து வேறுபடுகிறார். அதாவது, குடும்ப சொத்தை வளப்படுத்தும் தந்தையின் தொழிலில் ஈடுபடாமல், சுயமாக தொழில் தொடங்கி அதனை நிர்வகித்து வருகிறார். அவரின் தந்தை வணிகத்தில் கவின் தலையிடுவதில்லை.
ஹைக் என்ற குறுஞ்செய்தி செயலி கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே ஆப் ஸ்பார்க், மூவிஸ் நவ் என்ற செயலிகளை அறிமுகம் செய்தார். இவர் லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் மற்றும் மேலாண்மை துறையில் பயின்று பட்டம் பெற்றவர்.
அனன்யா பிர்லா
பிர்லா குடும்பத்தில் மற்றொரு இளம் வாரிசு அனன்யா பிர்லா. இவர் குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை துறையில் சேர்ந்த அவர், பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார். தற்போது இவர் கலைத் துறையில் கால் பதித்துள்ளார்.
தனது தந்தையின் தொழிலில் ஈடுபடுவதை தவிர்த்து, சுய விருப்பத்தின்பேரில் பாடகியாக மாறியுள்ளார் அனன்யா பிர்லா. யூனியவர்சல் மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து, நைன் சிங்கிள்ஸ், லிவிங் தி லைஃப், போன்ற பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். அதனால், வீடுகளில் சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில் கிராமங்களிலுள்ள பெண்களுக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்கி உதவுவதற்காக ஸ்வதந்திரா மைக்ரோஃபின் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.