
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும், விரேன் மெர்ச்சன்ட் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மூத்த மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த வாரம் (டிச.29) திருமண நிச்சயம் நடந்தது. விரேன் மெர்ச்சன்ட் மருந்துகள் விற்பனைத் துறையில் கோலோச்சி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் நாதட்வாரா பகுதியிலுள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் பிரமாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன் விளைவாக ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெயர் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகத் தேடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பலரால் அறியப்பட்ட சில பணக்கார குடும்பங்களில் அம்பானியின் குடும்பம் முதன்மையானது. அந்த குடும்பத்துக்கு மருமகளாக தேர்வாகியுள்ளவர் குறித்து அறிந்துகொள்வதன் பொருட்டு அந்த தேடல்கள் துவங்குகின்றன.
ராதிகாவின் குடும்பம்
என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட். தாயார் பெயர் ஹைலா மெர்ச்சன்ட்.
குஜராத்தில் பிறந்து முழுவதும் மும்பையில் வளர்ந்தவர். இவர், தனது பள்ளிப் படிப்பை மும்மையிலும், கல்லூரிப் படிப்பை நியூ யார்க்கிலும் பயின்றார்.
நியூ யார்க்கில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார். இவர், தற்போது என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
ராதிகாவின் திறமை
ராதிகா மெர்ச்சன்ட் தொழிலதிபரின் மகளாக இருந்தாலும், தொழில்முறை நடனக் கலைஞர். பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற ராதிகா பல அரங்கேற்றங்களை செய்துள்ளார். அவர் குரு பாவனா தக்காரின் சீடர்.
கடந்த ஆண்டு ராதிகாவின் அரங்கேற்றத்துக்காக அம்பானி குடும்பம் பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. அதில் ராதிகா ஆடிய நடனம் பல செய்திகளின் தலைப்புகளாக இடம்பெற்றது.
மும்பையிலுள்ள ஜியோ உலக மையத்தில் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. மேலும், அம்பானி குடும்பத்தின் பல நிகழ்ச்சிகளிலும் ராதிகா மெர்ச்சன்ட் நடனமாடியுள்ளார்.
விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விலங்குகள் நலன் சார்ந்து பல பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ராதிகாவின் பணிகள்
ராதிகா மெர்ச்சன்ட் தனது தொழில்முறை வாழ்க்கையை 2017ஆம் ஆண்டு கோத்ரேஜ் குழுமத்தின் இஸ்ப்ராவா நிறுவனத்தில் தொடங்கினார். ஆடம்பர வீடு மனைகளை கட்டி விற்பனை செய்யும் பணியை அந்நிறுவனம் செய்துவருகிறது.
அதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு என்கோர் ஹெல்த்கேர் நிறுவன இயக்குநர் குழு உறுப்பினராகவும் பெறுப்பேற்றார்.
2016ஆம் ஆண்டு மும்பையிலுள்ள வணிக நுணுக்கங்களை வழங்கும் நிறுவனத்தில் தொழில்முறை பயிற்சி பெற்றார். வடகிழக்கு இந்தியாவில் வணிகத்தை மேம்படுத்துதல், கார் டாக்ஸி சேவை, சர்வதேச அளவிலான வங்கி பரிவர்த்தனைகள் போன்றவை குறித்து ஆராய்ச்சி பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
ஹிந்து மத நம்பிக்கை
ராதிகா மெர்ச்சன்ட் ஹிந்து மத நம்பிக்கையில் அதீத ஆர்வம் கொண்டவர். திருமண நிச்சயத்துக்கு முன்பு அம்பானியுடன் பல மாநிலங்களிலுள்ள கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டன.
கேரளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். ஆனந்த் அம்பானி உடனான திருமண நிச்சயமும் ராஜஸ்தான் கோயிலில்தான் நடைபெற்றது.
அம்பானி குடும்பத்துடனான நட்பு
அம்பானி குடும்பத்துடன் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நட்பு கொண்டவர் ராதிகா மெர்ச்சன்ட். ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு இஷா அம்பானியின் திருமண நிச்சயத்தின்போது பலரால் அறியப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம், இணையத்தில் வைரலானது. ஆனந்த் அம்பானிக்கு ராதிகாவுடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் பரவின. 2018ஆம் ஆண்டே இருவருக்கும் திருமணம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அம்பானி மகள், இஷா அம்பானி - ஆனந்த் பிராமல் திருமணத்தில் கலந்துகொண்டார். அதேபோன்று அம்பானி மகன், ஆகாஷ் அம்பானி - ஸ்லோக்கா மேத்தா திருமணத்திலும் கலந்துகொண்டார்.
இஷா அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராதிகா நடனமாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.