அதானி, அம்பானிகளால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி பேச்சு

நாட்டில் உள்ள தலைவர்களையும், ஊடகங்களையும் அதானியும், அம்பானியும் விலைக்கு வாங்கியிருக்காலம். ஆனால்,  ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது.
அதானி, அம்பானிகளால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி பேச்சு


நாட்டில் உள்ள தலைவர்களையும், ஊடகங்களையும் அதானியும், அம்பானியும் விலைக்கு வாங்கியிருக்காலம். ஆனால்,  ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது. ராகுல்காந்தியை வாங்குவதற்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்தது ஆனால் முடியவில்லை என்று பிரியங்கா காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த டிசம்பா் 24 ஆம் தேதி தில்லி வந்தடைந்தது. தில்லியில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவா் சோனியா காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் உள்ளிட்டோா் நடைப்பயணத்தில் பங்கேற்றனா். 

தற்போது மீண்டும் செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தியின் யாத்திரை தில்லியிலிருந்து புறப்பட்டது. தில்லி கஷ்மீரி கேட்டிலிருந்து புறப்பட்ட ராகுல் யாத்திரையில் பல்வேறு பிரமுகா்கள் பங்கேற்றனா். இதில் முன்னாள் ‘ரா’ இயக்குநரும், மத்திய புலனாய்வுத் துறை (ஐபி) இயக்குநருமான ஏ.எஸ்.துலாத்தும் ராகுல் காந்தியோடு கைகோா்த்து தில்லி யாத்திரையில் பங்கேற்றாா். 

மறைந்த பாஜக தலைவா் வாஜ்பாய் பிரதமராக இருந்து போது துலாத், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த கூரியத் அமைப்புகளுடான பேச்சுவாா்த்தையில் துலாத், வாஜ்பாய்க்கு முக்கிய ஆலோசகராகவும் இருந்தவா்.

தற்போது ராகுல் காந்தியின் யாத்திரை தில்லியிருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தை அடைந்துள்ளது. 

தில்லி - உ.பி. இடையிலான லோனி நகரம் வழியாக உத்திரப் பிரதேசத்தின் காஜியாபாத்துக்குள் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். 

உத்தரப் பிரதேச மாநில எல்லைப் பகுதியில், ராகுல் காந்திக்கு ஆயிரக்கணக்கான தொண்டா்கள் உற்சாக வரவேற்பளித்ததோடு தேசிய மாநாட்டுத் தலைவா் பரூக் அப்துல்லாவும் யாத்திரையில் இணைந்தாா்.

லோனியில் யாத்திரையை வரவேற்று பிரியங்கா காந்தி பேசினார். 

அப்போது, தனது சகோதரர் ராகுல் காந்தி ஒரு போராளி. நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறினார். 

கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களால் ராகுல் காந்தியை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என்று பிரியங்கா காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

“கௌதம் அதானி, முகேஷ்  அம்பானி நாட்டின் பெரிய அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி இருக்கலாம், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும், ஊடகங்களையும் விலைக்கு வாங்கி இருக்கலாம். ஆனால், அவர்களால் என் சகோதரனை வாங்க முடியவில்லை, ஒருபோதும் அவ்வாறு வாங்கவும் முடியாது. நான் அவரைப் பற்றியும் அவருடன் பயணித்து வரும் மற்ற அனைவரைப் பற்றியும் பெருமைப்படுகிறேன், ”என்று பிரியங்கா காந்தி கூறினார்.

மேலும், “என் சகோதரர் ராகுல்காந்தியை பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் இந்த அரசாங்கம் அவரது செயல்பாடுகளை சிதைப்பதற்கான அனைத்து அழுத்தங்களையும் கொடுத்தது, ஆனால், அவர்களால் அதை செய்ய முடியவில்லை. அவரது மாண்புகளை, நற்பெயர்களை கெடுக்க பல ஆயிரம் கோடிகளை அரசு செலவழித்தது. ஆனாலும், அவர் உண்மையின் பாதையில் இருந்து விலகாமல் உத்வேகத்துடன் செயல்பட மேலும் தூண்டியுள்ளது. அவரை குறிவைத்து விசாரணை அமைப்புகள் அனுப்பப்பட்டன, ஆனால், அவர் ஒரு போர் வீரன் என்பதால் பயப்படவில்லை” என்று காஜியாபாத்தில் உள்ள லோனி எல்லையில் இடியுடன் கூடிய கரவொலியுடன் பிரியங்கா காந்தி கூறினார். 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிலைமையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

வெறுப்பு அரசியல் மற்றும் அரசுக்கு மத்தியில் அன்பைப் பரப்புவதற்காக நாட்டின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை ராகுல் தொடங்கி, நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்காக நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

"இந்த யாத்திரையில் கலந்துகொள்ளும் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையின், அன்பின், மரியாதையின் செய்திகளை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள்," என்று அவர் கூறினார்.

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. “கங்கா-ஜமுனி தெஹ்சீப்பின் பிறப்பிடமான உத்தரப்பிரதேசத்தின் புனித பூமிக்கு எனது வணக்கங்கள். அதன் வரலாறு மற்றும் தியாகங்கள் அதன் தேசபக்திக்கு சான்றாகும், மேலும், இது புரட்சியின் புதிய உதாரணங்களை அமைக்கும்” என்று ராகுல் காந்தி முன்னதாக ட்வீட் செய்திருந்தார். 

உத்தரபிரப்தேசத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த பயணம் வியாழக்கிழமை மாலை ஹரியானாவின் பானிபட் சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் வழியாகச் ஜம்மு காஷ்மீரை அடைகிறது. 

காங்கிரசின் நாட்டின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் இதுவரை 3,122 கி.மீ தூரத்தை சென்றடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com