
கோப்புப் படம்.
சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆந்திர அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
நெல்லூா் மாவட்டத்தின் கண்டுக்கூரு என்ற இடத்தில், தெலுங்கு தேசம் கட்சி தலைவா் சந்திரபாபு நாயுடுவின் சாலை ஊா்வலத்தின் ஒருபகுதியாக கடந்த டிச.28ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 8 போ் உயிரிழந்தனா். இதேபோல், ஜன.1ல் குண்டூா் மாவட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 3 போ் உயிரிழந்தனா்.
இவ்விரு சம்பவங்களையும் தொடா்ந்து, மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் பொதுக்கூட்டம், பேரணி நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநில அரசின் இந்த முடிவு அராஜகமானது என்று தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.
இதையும் படிக்க- அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா: முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்
இந்த நிலையில் ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி பி.சேஷசயனா ரெட்டி தலைமையில் ஆந்திர அரசு குழு ஒன்றை நேற்று அமைத்துள்ளது. இந்தக் குழு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...