புதையும் ஜோஷிமட் நகரம்: ஏன் இப்படி ஆனது?

ஜோஷிமட் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு-புதைவு மண்டலமாக மாநில அரசு அறிவித்தது.
புதையும் ஜோஷிமட் நகரம்: ஏன் இப்படி ஆனது?
புதையும் ஜோஷிமட் நகரம்: ஏன் இப்படி ஆனது?

உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமட் நகரம் புதையுண்டு வரும் நிலையில், அந்த நகரத்தை மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு-புதைவு மண்டலமாக மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருப்பது, அப்பகுதி மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முதல்கட்டமாக, மிகவும் சேதமடைந்த 60 வீடுகளில் வசித்த குடும்பத்தினா் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

பிரதமர் அலுவலகம், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆகியவை, ஜோஷிமட்டில் தங்கியிருக்கும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, நிலைமையைக் கண்காணித்து வருகிறார்கள்.

உத்தரகண்டில் புகழ்பெற்ற பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சா்வதேச பனிச்சறுக்கு சுற்றுலாத் தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக உள்ள ஜோஷிமட் நகரில் நிலப் பகுதி தாழ்ந்து வருகிறது. சாலைகள் மற்றும் வீடுகளில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு வருவது அங்கு வாழும் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியது.

இந்தச் சூழலில், மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு-புதைவு மண்டலமாக ஜோஷிமட் நகா் அறிவிக்கப்பட்டது.

இதற்கக் காரணம் என்ன? மத்திய அரசால் அமைக்கப்பட்ட உண்மைக் கண்டறியும் குழு மற்றும் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இதுவரைக் கிடைத்த தகவல்கள் என்று ஊடகங்களில் சில தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது,

இந்த நகரமானது இயற்கையிலேயே மிகவும் குறைந்த தாங்கும் திறன் கொண்ட மண்ணால் ஆன நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது.

கழிவுநீர் கால்வாய்கள் இல்லாதது உள்ளிட்வற்றால் நேரிட்ட நீர்க்கசிவு போன்றவை, மண்ணின் குறைந்த தாங்கும் திறனை மேலும் மோசமாக்கின.

மிகச் சரியாக ஜோஷிமட்  நகருக்கு அடியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு என்டிபிசி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் ஏற்பட்டிருக்கும் உயரழுத்தம் காரணமாக, நிலப்பரப்பில் வாயுக்கள் வெளியேறுவதால் பூமியில் பிளவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஆனால், இது தொடர்பாக புவியியல் துறையினரோ, ஐஐடி ரூர்கேளா, வாடியா இமயமலை புவியியல் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவை இதுவரை எந்த தகவலையும் அளிக்கவில்லை.

மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் சுற்றுலாவுக்கான மாற்றங்கள் என வனப்பகுதியை அழித்தது, உறுதித்தன்மை இல்லாத இடங்களில் கட்டமைப்புகளை ஏற்படுத்தியதன் விளைவாகவும் கூறப்படுகிறது.

சிறிய கட்டடங்கள் கீழே விழுந்து கிடப்பதும், பெரிய பெரிய கட்டடங்கள் சாய்ந்து ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு நிற்பதும், சாலைகளின் குறுக்கே விரிசல்களும், மிகப்பெரிய வீடுகள் சிதிலமடைந்து ஏதோ மிகப்பெரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக ஜோஷிமட் காணப்படுகிறது.

இங்கு வாழ்ந்து, தங்களது வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்ட மக்கள், இன்று இது ஊரே இல்லை, வாழவே முடியாது என்று ஒரு அறிவிப்பை மாநில அரசு அறிவித்துவிட்டதால் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்துவிட்டு ஊரைப் போலவே வாழ்வும் புதையும் அபாயத்தால் கலங்கி நிற்கிறார்கள்.

இதற்கிடையே, தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவில், 

கடந்த பல ஆண்டுகளாக ஜோஷிமட் பகுதிகளில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள், தற்போதைய சூழ்நிலைக்கு காரணமாக இருந்திருக்கலாம். 

உத்தரகண்ட்டில் உள்ள சாா்-தாம் (கேதாா்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி) இணைப்பு மேம்பாட்டிற்கான திட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ரூ.12,000 கோடி முதலீடு செய்தது. மேலும், இதே பகுதியில் எரிசக்தித் துறை அமைச்சகத்தின் என்டிபிசி 2013 -இல் சமோலி மாவட்டத்தில் உள்ள தௌலிகங்கா ஆற்றின் மீது 520 மெகாவாட் எரிசக்தி உற்பத்திக்கு தபோவன் விஷ்ணுகாட் மின் நிலையம் ரூ.2,976.5 கோடி முதலீட்டில் கட்டத் தொடங்கியது.

இந்தக் கட்டுமானப் பணிகளுக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் உள்ள தொடா்புகளைக் கண்டறிய பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும், இங்குள்ள மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தொடா்புடைய மத்திய அமைச்சக பிரதிநிதிகளைக் கொண்ட உயா் அதிகாரக் கூட்டுக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜோஷிமட் பகுதிகளில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் வேளாண் நிலங்களிலும் பெரிய விரிசல்கள் உருவாகி படிப்படியாக புதையுண்டு வருகிறது. பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com