51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்

ஆற்றில் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகான எம்வி கங்கா விலாஸ், வாராணசியிலிருந்து நாளை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியால் தொடக்கி வைக்கப்படவிருக்கிறது.
51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்
51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்


ஆற்றில் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகான எம்வி கங்கா விலாஸ், வாராணசியிலிருந்து நாளை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியால் தொடக்கி வைக்கப்படவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின்போது, நீர்வழிப்பாதையை மேம்படுத்தும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பிலான ஏராளமான திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசுப் படகு, வாராணயிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, சுமார் 51 நாள்கள் 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியை அடையவிருக்கிறது. இது நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் சுமார் 27 நதிகளைக் கடந்து, இரண்டு நாடுகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது.

51 நாள்கள் இந்த சொகுசுப் படகின் பயணத்தின் மூலம், நாட்டின் பல்வேறு கலாசார வேர்களையும், அதன் பன்முகத்தன்மையின் அழகான அம்சங்களையும் கண்டறியவும் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தளங்களைக் கொண்ட இந்த சொகுசுப் படகு 18 சொகுசு அறைகளுடன், 36 விருந்தினர்கள் பயணிக்கும் வகையில் அனைத்து அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசுப் படகின் ஒட்டுமொத்த பயணத்திலும் பங்கேற்க 32 சுவிட்சர்லாந்து பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

நாட்டின் மிகச் சிறந்த அம்சங்களை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த படகின் பயணம் அமையும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சொகுசுப் படகானது நாட்டில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், தேசிய பூங்காக்கள், ஆற்றங்கரைகள், பாட்னா, பிகார் உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்கள் என 50 சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாசாரம், வரலாறு, ஆன்மிகம் உள்ளிட்ட விவரங்களை நேரடியாகப் பார்த்து உணரும் அதிர்ஷ்டம் இந்த படகுப் பயணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், பல ஆற்றங்கரையோர நகரங்களில் தங்கும் விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு, பல நகரங்கள் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருக்கும் பயணிகள், சிறிய படகுகள் மூலம் வாராணசிக்கு அழைத்து வரப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை இந்த படகு சேவை இயக்கப்படும். கங்கை ஆற்றில் மழைக் காலங்களில் நீர் அதிகரிக்கும் என்பதால், மூன்று மாதங்களுக்கு இந்தப் பயணம் நிறுத்திவைக்கப்படும்.

இந்த சொகுசுப் படகின் பயணத்தை, காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்துத் தொடக்கி வைக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com