குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு? திரை விமர்சனம்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் வெளியீடாக வெளிவந்துள்ளது.
குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு? திரை விமர்சனம்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் வெளியீடாக வெளிவந்துள்ளது.

பெரும் தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துள்ள தொழிலதிபர் ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) மூன்று மகன்கள். மூன்று மகன்கள் இருந்தபோதும் ஜெய் (ஸ்ரீகாந்த்) மற்றும் அஜய் (ஷ்யாம்) மட்டுமே தனது அடுத்த வாரிசுகளில் ஒருவர் என்கிற எண்ணத்தில் இருக்கிறார் அவர்.

மூன்றாவது மகனான விஜய் (விஜய்), தன் அண்ணன்களைப் போல தந்தை வழியில் நடக்காமல் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார். அடுத்த வாரிசு யார் என்பதில் ஜெய் மற்றும் அஜய் இடையே போட்டி நிலவ, பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய கட்டாய நிலை  ராஜேந்திரனுக்கு ஏற்படுகிறது.

தொழில் வாரிசு அந்தஸ்தை எந்த மகனிடம் ஒப்படைக்கிறார் ராஜேந்திரன்? தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவரும் விஜய், மீண்டும் வீட்டுக்கு எப்படி வருகிறார்? தொழில் மட்டுமில்லாமல், குடும்பத்தில் நிலவிக்கொண்டிருக்கும் பிரச்னைகளையும் விஜய் எப்படி சரி செய்கிறார்? என்பதே வாரிசு படத்தின் மீதி கதை.

டிரெய்லரைப் பார்த்திருந்தாலே கதை தெரிந்திருக்கும். இதைப் படித்த பிறகு, அடுத்து என்ன நடந்திருக்கும்? இறுதியில் எப்படி படம் முடிந்திருக்கும்? என்கிற எண்ணவோட்டம் எல்லாருடைய மனதிலும் எழலாம். அப்படி எழுந்தால், வாரிசு திரைப்படம் எந்தவிதத்திலும் யாரையும் ஏமாற்றமடையச் செய்யாது.

விஜய்யும் அப்படித்தான். படம் முழுக்கத் தனியொருவராகத் தூக்கி சுமக்கிறார் விஜய் என்றால் மிகையாகாது. நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல்கள் என முதல் பாதியில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய்.

இரண்டாவது பாதியிலிருந்து, விசில் பறப்பதற்கான காட்சிகளிலும் விஜய் மிரட்டியிருக்கிறார். நடனம், கேலி - கிண்டல், சண்டை என மேலே சொன்னதைப்போல படத்தின் திரைக்கதையைத் தனியாளாக சுமந்திருக்கிறார் விஜய். திரைக்கதையைப் பொருத்தவரை, மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்ட உணர்வைத் தருகிறது.

வழக்கமான பழைய தமிழ்ப் படங்களைப் போல, படத்துக்கும் பாடல்களுக்கும் கதாநாயகி அவசியம் என்பதற்காக நடிகை ராஷ்மிகா இந்தப் படத்தில் இணைக்கப்பட்டுள்ளார் போல. ஆனால், உடன் இருப்பது விஜய் என்பதாலோ என்னவோ, பாடல்களில்கூட ஒப்பீட்டளவில் அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. அந்த வேலையை விஜய் பார்த்துள்ளார். 

இந்தப் படத்தில், திரைக்கதைக்குத் தேவையான சிக்கல்கள் பெரும்பாலும் குடும்பத்தைச் சுற்றியே வருவதால், படத்துக்கு ஒரு வில்லன் கதாபாத்திரம் தேவை என்பதற்காக எழுதப்பட்டதைப்போல இருக்கிறது ஜெயபிரகாஷாக வரும் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம். இருந்தபோதிலும், வாரிசு திரைப்படத்தை எடுப்பதற்கான நோக்கத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார் வம்சி. 

மையக் கருவான தாயின் பார்வையில் குடும்பத்தைப் பார்க்கும் உணர்வுகள், எல்லாம் இருந்தும் அனைத்தையும் இழந்ததைப் போல தவிக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு தந்தை / தொழிலதிபர் உணர்வுகள் மிகச் சரியாகக் கடத்தப்பட்டிருக்கிறது. தவறியிருந்தால் படமே தடம்புரண்டிருக்கும்.

வம்சியின் இரண்டாவது நோக்கம் விஜய் ரசிகர்கள். ரசிகர்களுக்கும் சரியான விருந்தைப் படைத்திருக்கிறார் வம்சி. குறிப்பாக இரண்டாவது பாதியில் “மூன்று பிளாக்பஸ்டர் கதையைச் சொல்லி” என விஜய் பேசுவதும், அந்தக் காட்சியே போதும், வம்சி மனதில் விஜய் ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர.

விஜய்யை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார் கார்த்திக் பழனி. விஜய் மிகவும் குறைந்த வயதாக உங்களுக்குத் தெரிந்தால், அதற்கு மேக்கப் மற்றும் ஒளிப்பதிவு முக்கியப் பங்கு. படத்தொகுப்பைச் செய்துள்ள பிரவீன் கேஎல்-க்கு விஜய் மாஸாக வரும் காட்சிகளைத் தவறவிடக் கூடாது என சில இடங்களில் ஸ்கீரினை பிரித்தெல்லாம் பல கோணங்களில் எடுக்கப்பட்ட மாஸ் காட்சிகளை ஒன்றாகக் காட்டியிருக்கிறார்.

படத்தில் யோகிபாபு சில இடங்களில் வந்தாலும், ரசிகர்கள் ட்ரோல் செய்வதைப் போல உடனிருந்துகொண்டே விஜய்யை ட்ரோல் செய்து ஸ்கோர் செய்திருக்கிறார். சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் ஆகியோர் தேவையான அளவு நடிப்பைக் கொடுத்து அவர்களது பணியைச் சரியாக செய்துள்ளனர்.

பாகுபலி முதல் பாகத்தில் ஒரு பெரும் சிலை சரியும்போது, பாகுபலி கதாபாத்திரம், ஒற்றை ஆளாக அதைச் சுமந்து சரியாமல் காப்பாற்றுவார். அப்படிதான் வாரிசு படத்தில் விஜய்யும்.

இசை குறித்து... படத்தை சுமந்து செல்லும் விஜய்க்கு,  பெருமளவில் உதவியிருப்பவர் தமன்தான். அது பின்னணி இசையாக இருந்தாலும் சரி, பாடல்களாக இருந்தாலும் சரி.

மொத்தத்தில் வாரிசு படத்தைத் திரையரங்கில் பார்த்தால், ரசிகர்களுடன் ரசிகராகக் கொண்டாடக் கூடிய படம். ஓடிடியில் பார்த்தால் குடும்பங்கள் கொண்டாடும் படம்.

விஜய்யே வாரிசுவில் சொல்லிவிட்டார், இது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று.. பிறகென்ன...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com