
கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருது நிகழ்வில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடல் வெற்றி பெற்றது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற சாதனையும் படைத்துள்ளது. படத்தின் இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க | கோல்டன் குளோப் விருதை வென்றது ‘நாட்டுக் கூத்து’ பாடல்
இதனால், சமூக வலைதளங்களில் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, ‘எஸ்.எஸ்.ராஜமௌலி, கீரவாணி உங்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த சரியான வெற்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்’ என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
.@mmkeeravaani @ssrajamouli @RRRMovie for all your hard work, well deserved win.. am very happy.. congratulations.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 11, 2023
ஏ.ஆர்.ரஹ்மானும் ‘அனைத்து இந்தியர்கள் மற்றும் உங்கள் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் கீரவாணி அவர்களே..இது ஒரு முன்னுதாரணம்’ எனப் பாராட்டியுள்ளார்.