மூதாட்டி மீது சிறுநீர் கழிக்கவில்லை.. குற்றம்சாட்டப்பட்டவர் எடுத்த யு-டர்ன்

ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சங்கர் மிஸ்ரா
சங்கர் மிஸ்ரா

ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 26ஆம் தேதி நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது மது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியது. 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தில்லி செஷன்ஸ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில், விமானத்தில் மூதாட்டி மீது தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், அவரே சிறுநீர் கழித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது திடீர் திருப்பமாக உள்ளது.

அதாவது, குற்றம்சாட்டியிருக்கும் மூதாட்டி, அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார். எனவே, அங்கே மிஸ்ரா செல்ல முடியாது. அந்த மூதாட்டிக்கு இன்கான்டினஸ் எனப்படும் சிறுநீர் அடக்க முடியாத பிரச்னை உள்ளது. எனவே அவரே சிறுநீர் கழித்துவிட்டார். அவர் ஒரு கதக் நடனக் கலைஞர், 80 சதவீத கதக் நடனக் கலைஞர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும் என்றும் சங்கர் மிஸ்ராவின் வழக்குரைஞர் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நடந்து இத்தனை நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக, மிஸ்ராவின் வழக்குரைஞர் இந்த நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து 11 நாள்களுக்குள் டிசம்பர் 6ஆம் தேதி தில்லி - பாரீஸ் சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் மது அருந்திய நபர் ஒருவர் பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். 

இந்த இரு சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்த பிறகு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியது. 

தில்லி - பாரீஸ் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபருக்கு 30 நாள்கள் விமானத்தில் பறப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தில்லி காவல் துறை, விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியாவுக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே வெளிநாட்டுக்கு சங்கர் மிஸ்ரா தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்த சங்கர் மிஸ்ராவை கடந்த வாரம் கைது செய்த காவல்துறையினர் தில்லி அழைத்து வந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கர் மிஸ்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com