குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் பரபரப்பான ஆவணப்படம்

2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குஜராத் கலவரம் குறித்த நேர்காணலில் நரேந்திர மோடி
குஜராத் கலவரம் குறித்த நேர்காணலில் நரேந்திர மோடி

2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் மூண்ட கலவரத்தில்..
ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் மூண்ட கலவரத்தில்..

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், லண்டன் வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா (2001 - 2006), பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார். 

குஜராத் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், கலவரத்தின்போது முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதற்காக அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிபிசி சுட்டிக்காட்டியுள்ள ஆய்வுக் குழு அறிக்கை
பிபிசி சுட்டிக்காட்டியுள்ள ஆய்வுக் குழு அறிக்கை

குஜராத் கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் ஆவணப்படத்துக்கு நேர்காணல் அளித்த இந்திய அரசியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்களையும், அந்த காலகட்டத்தில் மக்களிடம் அவர் (நரேந்திர மோடி) மேற்கொண்ட பிரசாரங்களையும் தொகுத்து ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் நரேந்திர மோடி
குஜராத் கலவரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் நரேந்திர மோடி

இந்த ஆவணப்படத்தை மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், யூடியூபிலிருந்து இந்த விடியோ நீக்கப்படுவதற்கு முன்பு விரைந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

பிபிசியின் ஆவணப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோவுக்கு பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com