மகளிர் ஆணையத் தலைவி காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்: சிசிடிவி வெளியானது

தில்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மலிவால் தில்லியில் குடிபோதையில் இருந்த நபரால் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மகளிர் ஆணையத் தலைவி காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்: சிசிடிவி வெளியானது


புது தில்லி: தில்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மலிவால் தில்லியில் குடிபோதையில் இருந்த நபரால் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சாலையோரம் நின்றிருக்கும் சுவாதி மலிவாலிடம், குடிபோதையில் இருந்த நபர், பேசுவதும், அவரிடம் மலிவால் பேசிக் கொண்டிருக்கும் போது, ஓட்டுநர் இருக்கை அருகே இருந்த கண்ணாடியில் சுவாதியின் கை சிக்கிக் கொண்டிருந்த நிலையில், அவர் காரை இயக்கியதும் அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது.

தலைநகர் தில்லியில் பெண்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யச் சென்ற மகளிர் ஆணையத் தலைவிக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அவர் கூறுகையில், கார் ஓட்டுநரை நிறுத்த முயன்ற தனது கை காருக்குள் சிக்கிய நிலையில், 15 மீட்டர் தொலைவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அருகே தான் காரில் இழுத்துச் செல்லப்பட்டதாக சுவாதி மலிவால் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், சுவாதி, சாலையோரம் நிற்கிறார், அவரிடம் கார் ஓட்டுநர் வந்து பேசுகிறார். காரில் ஏறும்படி சொல்கிறார். அதற்கு சுவாதி, தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும், உறவினர் வந்து கொண்டிருக்கிறார் என்று பதிலளிக்கிறார். அந்த கார் புறப்பட்டுச் சென்று யு-டர்ன் போட்டு மீண்டும் சுவாதியிடம் வருகிறது.

என்னை எங்கே இறக்கி விடுவீர்கள் என்று சுவாதி கேட்கிறார். இரண்டாவது முறையாக வந்து கேட்கிறீர்களே? நான்தான் சொல்லிவிட்டேனே என்று  சொல்வதும் விடியோவில் பதிவாகியிருக்கிறது. பிறகு, காரில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே சுவாதி செல்வதும், பிறகு கார் புறப்படுவதும், சுவாதியின் அலறல் சப்தமும் பதிவாகியிருக்கிறது.

இந்த சம்பவத்தில், தொடர்புடைய ஹரீஷ் என்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த 22 நிமிடத்தில் இவர் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை பதிவிட்டுள்ளது.

உண்மையில் இது மிகக் கொடூரமான சம்பவம் என்றும், எனது குழுவினர் வந்து காப்பாற்றவில்லை என்றால் நான் அடுத்த அஞ்சலியாகியிருப்பேன் என்றும் சுவாதி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com