
ஜம்முவில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம் தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: விஷால் படத்தில் இணைந்த ‘புஷ்பா' பட வில்லன்!
இந்த நிலையில், ஜம்முவின் புறநகர் பகுதியில் நேற்று (ஜனவரி 21) நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் காரணத்தினால் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் இன்று பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள நர்வால் என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. அதில், 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் ஒற்றுமைப்பயணம் மீண்டும் இன்று (ஜனவரி 22) காலை 7 மணிக்கு சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஹிராநகர் பகுதியிலிருந்து தொடங்கியது. இதனால், ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தனது ஆதரவாளர்களுடன் தேசியக் கொடியினை கையிலேந்தி ராகுல் காந்தி பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் சம்பா மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியினை கடந்து செல்லும்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 25 கிலோ மீட்டர் நடந்த பிறகு இந்தப் பயணம் இரவு நேர ஓய்வுக்காக சாக் நாக் பகுதியில் நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் யார்?
ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்து பேசிய அதிகாரிகள் கூறியதாவது: ராகுல் காந்திக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒற்றுமைப் பயணம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...