லக்கீம்பூா் கெரி வன்முறை: ஆசிஷ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமீன்

ஆசிஷ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்கீம்பூா் கெரி வன்முறை: ஆசிஷ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமீன்
லக்கீம்பூா் கெரி வன்முறை: ஆசிஷ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமீன்

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.கே. மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் வழங்கி, இந்த 8 வார காலமும் தில்லியிலோ உத்தரப்பிரதேசத்திலோ தங்கியிருக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் பிறப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்த நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு எதிராக விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினா் தரப்பை நியாயமான முறையில் உயா்நீதிமன்றம் விசாரிக்கவில்லை என்று கூறி, ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்தது. 

அவருக்கு ஜாமீன் அளிப்பதற்கு முன், தங்கள் தரப்பை தெரிவிக்க இறந்தோரின் குடும்பத்தினருக்கு போதிய வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் அலகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து லக்கீம்பூா் கெரி மாவட்ட சிறையில் ஆசிஷ் மிஸ்ரா அடைக்கப்பட்ட நிலையில், அவரின் ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது. அவா் அரசியல் செல்வாக்குமிக்கவா் என்பதால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்று கூறி, கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஆசிஷின் ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத்தொடா்ந்து அவா் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com