என்னுடைய உழைப்பால் காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது: அசோக் கெலாட்

2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுவற்கு காரணம் தான் கட்சிக்காக ஆற்றியப் பணியே என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 
என்னுடைய உழைப்பால் காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது: அசோக் கெலாட்

2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுவற்கு காரணம் தான் கட்சிக்காக ஆற்றியப் பணியே என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 


ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அடிக்கடி அதிகாரப் பகிர்வில் மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் கெலாட் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்வில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அசாக் கெலாட் கூறியதாவது: இந்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 156 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க காரணம் நான் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களே ஆவர். அவர்கள் 2013-ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை ஆற்றியப் பணியின் விளைவாகவே காங்கிரஸ் 2018-ல் ஆட்சியைப் பிடித்தது. 2013-ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு 21 சட்டமன்ற உறுப்பினர்களே இருந்தனர்.

என்னைக் காங்கிரஸ் பிரதேஷ் குழுவின் தலைவராக்கியப் பிறகே சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் மோடி அலை. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த 6 மாதத்திலேயே மக்கள் தங்களது தவறை உணர்ந்து கொண்டனர். இந்த சூழல் காங்கிரஸ் மீண்டும் ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க உதவியது. காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் கட்சிக்காக உழைத்ததை வெற்றிக்கான காரணம் என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், பாஜக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியே காங்கிரஸின் வெற்றிக்கு முக்கியக் காரணம். 

ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக குறை கூறுவதற்கு பாஜகவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் மாநில மக்களும் தற்போது உள்ள அரசின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியாக உள்ளனர். அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. எங்களது பாதை சரியாக உள்ளது.  1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியமைத்தபோது காங்கிரஸுக்கு 156 தொகுதிகள் கிடைத்தன. அப்போது மாநில காங்கிரஸ் குழுவின் தலைவராக நான் இருந்தேன்.

அதே 156 தொகுதிகள் என்ற திட்டத்துடன் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். நாங்கள் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக துணை நின்றார்கள். மக்களுக்கு சேவை செய்யும் எனது அரசினைக் காப்பாற்ற நான் கடுமையாகப் போராடினேன். மக்களுக்கு சேவை செய்ய எனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com