ஷ்ரத்தாவைக் கொன்றுவிட்டு அஃப்தாப் செய்த துணிச்சலான செயல்

ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசிய வழக்கில், அஃப்தாப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசிய வழக்கில், அஃப்தாப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வரிசையில், ஷ்ரத்தா வாக்கரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அதனை இமாசலில் வீச அஃப்தாப் திட்டமிட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

இருவரும், கொலை நிகழ்வதற்கு முன்பு, இமாசலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்று சில நாள்கள் தங்கியிருந்தனர். இதனால், அப்பகுதியில் உடல்களை வீசுவது குறித்து அஃப்தாப் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக மிகப்பெரிய கருப்பு நிறப் பையை ரூ.1,200 கொடுத்து வாங்கியதும், பல்வேறு கார் ஓட்டுநர்களை தன்னை தில்லியில் இருந்து இமாசல் அழைத்துச் செல்லுமாறு கேட்டும், அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காரில் சென்றாலும் கூட, வழியில் தான் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் அஃப்தாப் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகுதான், நண்பர் பத்ரியின் வீட்டுக்கு அருகே வனப்பகுதிகள் இருப்பது தெரிந்து, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை அங்கு வீசுவது என முடிவு செய்துள்ளார் அஃப்தாப்.

இதற்கிடையே, ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட பிறகு 10 முதல் 12 நாள்கள் அவரது கைப்பேசியை அஃப்தாப் பயன்படுத்தியுள்ளார். உடனடியாக அதனை அணைத்து வைத்துவிட்டால் யாருக்கும் சந்தேகம் வந்துவிடும் என்பதாலும், உடல் பாகங்களை வீசும் வரை அவர் உயிரோடு இருப்பது போல தெரியப்படுத்த வேண்டும் என்றும் இதனை செய்துள்ளார்.

இதனால், கைப்பேசி பயன்பாட்டை வைத்து, ஷ்ரத்தா எப்போது கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்ய முடியாமல் காவல்துறையினருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, ஷ்ரத்தா வாக்கர் அவ்வப்போது பேசும் நபர்களுக்கு அவரது கைப்பேசியிலிருந்து அழைப்பை மேற்கொள்ளும் அஃப்தாப், எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு அணைத்து விடுவாராம். அதுபோல ஷ்ரத்தாவுக்கு யாரேனும் போன் செய்தாலும் எடுத்து, எதுவும் பேசாமல் பிறகு அணைத்து விடுவாராம். இதனால், பலருக்கும் ஷ்ரத்தாவின் கைப்பேசி சிக்னல் சரியாக இல்லை என்றுதான் தோன்றியிருக்குமே தவிர, அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கவே செய்யாது என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com