மோடியால் தாங்கிக் கொள்ள முடியுமா? சுப்ரமணியன் சுவாமி டிவீட்

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ரிசா்ச் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி டிவீட்
சுப்ரமணியன் சுவாமி டிவீட்

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபா் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ரிசா்ச் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறவனத்தின் பதிலை தனது டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்திருக்கும் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி, அதானி குழுமத்துக்கு எதிராக கயிறு இறுகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்று தனது கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்ட ஆழமான ஆய்வுக்குப் பிறகே அந்த அறிக்கை வெளியிடப்படுவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் கூறியது.

அது மட்டுமல்லாமல், முதலீட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், குடிமக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள் கூட பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத்தில் வெளிப்படையாகப் பேச பயப்படுவதால், அதானி குழுமம் பட்டப்பகலில் மிகப்பெரிய, அப்பட்டமான மோசடியைச் செய்ய முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் ஹிண்டர்பர்க் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு புதன்கிழமை வீழ்ச்சியடைந்தது. ரூ.20,000 கோடி மதிப்பிலான அந்தக் குழும பங்குகளை முதலீட்டாளா்கள் விற்பனை செய்தனா். வெள்ளிக்கிழமையும், அதானி குழும பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்து ட்விட்டரில் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தெரிவித்ததாவது:

எங்களது அறிக்கையில் முடிவில் அதானி குழுமத்துக்கு 88 நேரடி கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஆனால், 36 மணி நேரமாகியும் அதில் ஒரு கேள்விக்குக் கூட பதில் வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

அந்தக் கேள்விகளில், எங்கள் ஆய்வின்போது, அதானி குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் செயல் அதிகாரிகள் 12க்கும் மேற்பட்டோரிடம் பேசியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தும், 6க்கும் மேற்பட்ட நாடுகளின் அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து தகவல்களை திரட்டியிருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடா்பாக எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டிலிருந்து துளியும் பின்வாங்கப் போவதில்லை.

எங்களது ஆய்வறிக்கையை சட்டரீதியில் எதிா்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம்.

அவ்வாறு தொடா்ந்தால், சட்டப்பூா்வ ஆய்வுக்காக நாங்கள் அதானி குழுமத்தின் ஏராளமான முக்கிய ஆவணங்களைத் தருமாறு நீதிமன்றத்தில் கேட்போம்.

நாங்கள் போதிய அளவில் ஆய்வு செய்யாமல் அந்த ஆய்வை வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் கூறுவது தவறு. 2 ஆண்டுகளாகத் தொடா்ந்து ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களைத் திரட்டி உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகே எங்களது ஆய்வறிக்கையை வெளியிட்டோம் என்று ட்விட்டரில் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com