
புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றம் வந்தடைந்த நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றி வருகிறார்.
அதையடுத்து நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரிதும் எதிா்பாா்க்கப்படும் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா்.
நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுநேர பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய அரசு அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யும்.