
கோப்புப் படம்
ஜூன் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,61,497 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது 2022-ஆம் ஆண்டு ஜூன் மாத வருவாயுடன் (ரூ.1.45 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் 12 சதவீத அதிகரிப்பாகும். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியைக் கடப்பது இது 4-ஆவது முறையாகும். முக்கியமாக, கடந்த ஆண்டு மாா்ச்சில் இருந்து தொடா்ந்து 16 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, மொத்தமாக ரூ.1,61,497 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.
அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.31,013 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.38,292 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.80,292 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. செஸ் வரியாக ரூ.11,900 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மாதாந்திர வருவாயானது கடந்த ஏப்ரலில் ரூ.1.87 லட்சம் கோடி என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டிருந்தது. கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.57 லட்சம் கோடியாக இருந்தது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அவசியம்: ஜிஎஸ்டி அமலாக்க நடைமுறை எளிமைப்படுத்தப்பட வேண்டுமென அனைத்து இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு (கெயிட்) தெரிவித்துள்ளது. முக்கியமாக, ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக மூத்த அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட சிறப்பு செயற்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி ஏய்ப்பு, போலி ரசீதுகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் அந்தக் குழு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கெயிட் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க | பற்றி எரியும் பிரான்ஸ்! ஏன்? என்ன நடக்கிறது?