
மாநிலக் கட்சிகளை அழிக்கவும், எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்யவும் பாஜக திட்டமிடுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து அஜீத் பவார் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுடன் இணைந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ராஜஸ்தானில் ரூ.24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்!
அப்போது அவர் பேசியதாவது: நான் முன்னாள் பிரதமர்களான ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் பி.வி.நரசிம்மா ராவ் ஆகியோரின் அரசியலைப் பார்த்துள்ளேன். நான் குறிப்பிட்ட அனைத்து முன்னாள் பிரதமர்களும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தங்களது குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை ஆழமாக முன்வைப்பார்கள். ஆனால், அவர்கள் ஒருபோதும் எதிர்க்கட்சியினை சத்தமின்றி அமைதியாக்க நினைத்ததில்லை. பாஜக மாநில அளவிலான கட்சிகளை அழிப்பதற்காக முயற்சிப்பது போல் தெரிகிறது. இதனை அவர்கள் பல இடங்களில் செய்துள்ளனர்.
இதையும் படிக்க: அன்ன பாக்யா திட்டம்: நாளை மறுநாள் முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடிவு!
ஜனநாயகத்தில் ஆளும் கட்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு எதிர்க்கட்சியும் முக்கியம். ஆனால், பாஜக எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்ய திட்டமிடுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறுவதற்காக பாஜக மற்ற கட்சிகளில் பிளவினை ஏற்படுத்தி வருகிறது. இது ஜனநாயகத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லும் செயல். கருத்து மற்றும் கொள்கை வேறுபாடுகள் இருப்பதால் நான் யாரையும் எதிரியாக கருதவில்லை. கருத்து மற்றும் கொள்கைகளில் வேறுபாடுகள் இருப்பதனால் ஒருவர் பகைவராகிவிட மாட்டார் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...