

பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் ரூ.24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு இன்று (ஜூலை 8) அடிக்கல் நாட்டினார்.
அமிர்தசரஸ் முதல் ஜாம்நகர் வரையிலான பொருளாதார தளவாடத்தின் ஒரு பகுதியான 6 வழி பசுமை விரைவுச்சாலையை நாட்டு மக்களுக்காக பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மின்சாரத்தை பகிர்ந்து கொள்ளும் பசுமை ஆற்றல் தளவாடம், காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கான 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைத்தார்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: இன்னும் சில மாதங்களில் ராஜஸ்தானில் இரண்டு ஆறுவழி விரைவுச் சாலைகள் அமைக்கப்படும். இந்தப் புதிய அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலை மேற்கு இந்தியாவின் நிறுவனங்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இதனால் விநியோகச் சங்கிலி வலிமையடையும். பாஜக தலைமையிலான மத்திய அரசு மிகப் பெரிய அளவில் ராஜஸ்தானில் முதலீடு செய்து வருகிறது. ராஜஸ்தான் வேகமாக வளர்ச்சியடையும் திறன் பெற்றுள்ளது. அதன் காரணத்தினால் நாங்கள் இங்கு அதிக அளவில் முதலீடு செய்கிறோம். வழித்தடங்கள் பலவும் மேம்படுத்தப்படுவதால் மாநிலத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும். அதேபோல மாநிலத்தின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைவர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.