இந்திய-அமெரிக்க கலைஞர் ஜரீனா ஹாஷ்மி பிறந்தநாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இந்திய-அமெரிக்க கலைஞரும், அச்சுத் தயாரிப்பாளருமான ஜரீனா ஹாஷ்மியின் 86 ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 
இந்திய-அமெரிக்க கலைஞர் ஜரீனா ஹாஷ்மி பிறந்தநாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

புதுதில்லி: இந்திய-அமெரிக்க கலைஞரும், அச்சுத் தயாரிப்பாளருமான ஜரீனா ஹாஷ்மியின் 86 ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள்.

முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு, கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று இந்திய-அமெரிக்க கலைஞரும், அச்சுத் தயாரிப்பாளருமான ஜரீனா ஹாஷ்மியின் 86 ஆவது பிறந்தநாளையொட்டி, மினிமலிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரபல கலைஞரான ஜரினா ஹாஷ்மியைக் கொண்டாடும் விதமாக கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

ஜரீனா ஹாஷ்மியின் கலை வடிவமைப்புகள், ஓவியங்கள், சிலைகள், பிரிண்டிங் முறைகள் ஆகியவற்றுக்காக மிகவும் புகழப்பட்டவர்.  அப்ஸ்ட்ராக்ட், ஜியோமென்டரி ஆகிய இரண்டின் மூலம் அவர் உருவாக்கிய ஓவியங்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகள் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது படைப்பு பாரம்பரிய முறையில் இல்லாமல் புதிய சிந்தனைகளுடன் தனித்தன்மையுடன் அமைந்திருக்கும். 

சிறப்பு சித்திரத்தில், நியூயார்க்கைச் சேர்ந்த சிறப்பு விருந்தினரான கலைஞர் தாரா ஆனந்தால் விளக்கப்பட்ட இந்த கலைப்படைப்பு, "வீடு, இடப்பெயர்வு, எல்லைகள் மற்றும் நினைவகம் பற்றிய கருத்துகளை ஆராய ஹஷ்மியின் குறைந்தபட்ச சுருக்க மற்றும் வடிவியல் வடிவங்களைப் பயன்படுத்துவதைப் படம்பிடித்துக் காட்டுகிறது" என்று கூறியுள்ளது கூகுள். 

இந்தியாவின் உத்தப்பிரதேச மாநிலம்,  அலிகார் என்ற சிரிய நகரில் 1937 இல் இந்த நாளில் ஜரீனா பிறந்தார். அவரது குடும்பம் 1947 இல் பிரிவினையின் போது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு குடியேறினர்.

ஹாஷ்மி தனது 21 வயதில், வெளிநாட்டு தூதரை ஒருவரை மணந்து கொண்டதால், உலகம் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றார். 

அந்த வகையில் பாங்காக், பாரிஸ் மற்றும் ஜப்பான் சென்றவர். அங்கு பெரும் பகுதி நேரத்தை செலவிட்ட ஹாஷ்மி, அங்குள்ள கலை மற்றும் அச்சு தயாரிப்பில் நவீனத்துவம் மற்றும் சுருக்கம் போன்ற கலை இயக்கங்களில் தனது முழுமையான கவனத்தை செலவிட்டார். அது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரது ஆர்வம் அவருடைய படைப்புகள் உலகம் பேசும் அளவுக்கு உயர்த்தியது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

1977 இல் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்த ஹாஷ்மி, அங்கு அவருக்கு கலை மீதிருந்த ஆர்வமும் அதன்மூலம் சமூகம் மற்றும் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார். கலைஞர்களுக்கான வழக்குரைஞராகவும் மற்றும் பெண் கலைஞர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் நியூயார்க் பெண்ணிய கலை நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 

1980 இல், ஏ.ஐ.ஆரில் ஒரு கண்காட்சியை ஹாஷ்மி இணைந்து நடத்தினார். இது "தனிமைப்படுத்தலின் இயங்கியல், அமெரிக்காவின் மூன்றாம் உலகப் பெண் கலைஞர்களின் கண்காட்சி" என்று அழைக்கப்பட்டது.

இந்த அற்புதமான கண்காட்சி பல்வேறு கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியது மற்றும் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ஓடுக்கப்பட்டவர்களின் குரல்களை பதிவு செய்வதாக இருந்தது. 

மினிமலிசம் ஆர்ட் இயக்கத்தின் ஒரு பகுதியான ஹஷ்மி, அவர் வாழ்ந்த வீடுகள் மற்றும் நகரங்களின் அரை சுருக்கமான படங்களை ஒருங்கிணைக்கும் அவரது கலை வேலைப்பாடுகள் மரங்களலான கலை சிற்பங்கள் மற்றும் இன்டாக்லியோ பிரிண்டுகளுக்காக சர்வதேச அளவில் அறியப்பட்டார்.

ஹாஷ்மியின் கலைப்படைப்புகளை  சான் பிரான்சிஸ்கோ நவீன கலை அருங்காட்சியகம், விட்னி மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஆர்ட், சாலமன் ஆர் குகன்ஹெய்ம் மியூசியம் மற்றும் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் போன்ற பிற புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் உலகெங்கிலும் உள்ள மக்கள் இன்றளவும் கண்டு ரசித்து வருகின்றனர் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஹஷ்மி 2020 ஏப்ரல் 25 ஆம் தேதி தனது 83 வயதில் அல்சைமர் நோய் பாதிப்பால் லண்டனில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com