பிரதமர் பதவியையோ, அதிகாரத்தையோ காங்கிரஸ் விரும்பவில்லை: கார்கே

காங்கிரஸுக்கு அதிகாரத்திலோ, பிரதமர் பதவியிலோ ஆர்வமில்லை என பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். 
மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

காங்கிரஸுக்கு அதிகாரத்திலோ, பிரதமர் பதவியிலோ ஆர்வமில்லை என பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். 

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு, பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நேற்றும் இன்றும் (ஜூலை 17, 18) நடைபெறுகிறது. இதில் 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன. 

இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, 'காங்கிரஸுக்கு அதிகாரத்திலோ, பிரதமர் பதவியிலோ ஆர்வமில்லை என மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் சென்னையில் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இந்த சந்திப்பில் எங்களின் நோக்கம் நமக்கான அதிகாரத்தை பெறுவது அல்ல. இது நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்பதாகும்.

மாநில அளவில் நமக்குள் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இந்த வேறுபாடுகள் கருத்தியல் சார்ந்தவை அல்ல. சாமானியர்கள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், ஏழைகள், தலித், ஆதிவாசிகள், சிறுபான்மையினரின் உரிமைகள் திரைமறைவில் அமைதியாக நசுக்கப்படுகின்றனர். அவர்களை நம் பின்னால் நிறுத்த முடியாது

மத்திய அரசின் ஒவ்வொரு நிறுவனமும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மாறி வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நம் தலைவர்கள் சட்ட நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்வதற்காக அவர்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்குகள் போடப்படுகின்றன. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அரசியலமைப்பு அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவில் சேர்ந்து பிற கட்சி ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது லஞ்சம் கொடுக்கப்படுகிறது' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com