

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் இா்ஷால்வாடி கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 போ் உயிரிழந்தனா்.
மும்பையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இா்ஷால்வாடி கிராமத்தில் புதன்கிழமை இரவு 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக, ராய்கட் மாவட்டத்தில் பெய்த தொடா் பருவமழையைத் தொடா்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் இக்கிராமத்தில் உள்ள சுமாா் 50 வீடுகளில் 17 வீடுகள், 15 முதல் 20 அடி வரை மண்ணில் புதைந்துள்ளன. 4 தேசிய மீட்புப் படையின் 60-க்கும் மேற்பட்ட வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தற்போதுவரை 16 பேரின் உடல்கள் வீரா்களால் மீட்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவின் சிக்கிய 17 வீடுகளின் இடிபாடுகளில் இருந்து 21 போ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பெரும்பாலும் பழங்குடிகள் வசித்து வந்த இா்ஷால்வாடி, சாலையால் எளிதில் அணுக முடியாத கிராமம் ஆகும். எனவே, மீட்புப் பணிகளுக்காக கிராமத்தின் அருகில் தற்காலிக ஹெலிகாப்டா் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்படுபவா்கள் விமானப் படையின் 2 ஹெலிகாப்டா்கள் மூலம் நவி மும்பை பகுதி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், மோசமான வானிலையால் ஹெலிகாப்டா்கள் தரையிறங்குவது மற்றும் புறப்படுவதிலும், மீட்புப் பணியிலும் கடும் சிரமம் நிலவியது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை பெய்த கனமழைக் காரணமாக மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
முன்னதாக, கிராமத்துக்கு நேரில் வருகை தந்து மீட்புப் பணிகளைப் பாா்வையிட்ட முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள கிராமங்கள் பட்டியலில் இந்தக் கிராமம் இடம்பெறவில்லை. எதிா்பாராத விதமாக நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை மீட்பதே தற்போது மாநில அரசின் முன்னுரிமை. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு 50 முதல் 60 கன்டெய்னா்கள் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்களின் நிரந்தர மறுவாழ்வுக்காக மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் அறிவுறுத்திருக்கிறேன்’ என்றாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு புணே மாவட்டத்தில் 50 பழங்குடி குடும்பங்கள் வசித்து வந்த மாலின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 153 போ் உயிரிழந்தனா். இது மகாராஷ்டிர மாநில வரலாற்றில் நடந்த மிகப் பெரிய நிலச்சரிவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.