முறைதவறி பிறந்தவருக்கு பூர்விகச் சொத்தில் உரிமை உள்ளதா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

திருமணம் செய்து கொள்ளாமல் முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்விக சொத்தில் உரிமை இருக்கிறதா? என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
முறைதவறி பிறந்தவருக்கு பூர்விகச் சொத்தில் உரிமை உள்ளதா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை


புது தில்லி: திருமணம் செய்து கொள்ளாமல் முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா? என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்து கூட்டுக் குடும்ப முறைப்படி, சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமண உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் சுயமாக சம்பாதித்த சொத்தில் மட்டுமே பங்கு இருக்கிறதா? பூர்விக சொத்திலும் உரிமை இருக்கிறதா? என்பது குறித்து புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

1956- இந்து திருமணச் சட்டப் பிரிவு 16(3)-ன் கீழ், சட்டப்படி ஏற்றுக்கொள்ளாத திருமணம் மற்றும் முறைதவறிய உறவில் பிறந்த குழந்தைகள், கணவன் / மனைவிக்கு சட்டப்படி பிறந்த குழந்தைகளுடன் சமமான அளவில் சொத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு வழிவகை செய்கிறது.  ஆனால், இதில் பெற்றோர் சொந்தமாக சம்பாதித்த சொத்துகளைப் போல  பூர்விக சொத்துகளையும் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல்வேறு சட்ட நுணுக்கங்களை எடுத்தாளும் வகையில் வகையில் இந்த வழக்கு விசாரணை அமைந்துள்ளது. அதாவது சட்டப் பிரிவு 16 முறைகேடான உறவில் பிறந்த குழந்தையின் சொத்துப் பகிர்வை உறுதி செய்வதோடு, அது பெற்றோர் சொந்தமாக சம்பாதித்த சொத்து என்பதோடு கட்டுப்படுத்துகிறது. என்கிறது ஒரு வாதம். அதாவது, இந்துக் கூட்டுக் குடும்ப முறைப்படி குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்கிறது.

அதாவது, ஒரு கூட்டுக் குடும்பத்தின் பிரிக்கப்படாத சொத்தில், அந்தக் குடும்பத்தில் முறையான திருமண உறவில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று இந்து கூட்டுக் குடும்ப சட்டப்பிரிவு தெளிவுபடுத்துவதாக சட்ட நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய், சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மிக நீண்ட வாதங்களைக் கேட்ட பிறகு, மீண்டும் வியாழக்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இது தொடர்பான வழக்கில், கர்நாடகத்தில் விசாரணை நீதிமன்றம், முறைகேடாகப் பிறந்த குழந்தைக்கு பூர்விகச் சொத்தில் பங்கில்லை என்று தீர்ப்பளித்திருந்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாவட்ட நீதிமன்றம் திருத்தியிருந்தது.

இந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்து திருமண சட்டப்பிரிவு 16(3)- பெற்றோரின் சொத்தில் மட்டுமே முறைகேடாகப் பிரிந்த குழந்தை உரிமை கொண்டாட முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்து கூட்டுக் குடும்ப / பூர்விக சொத்தில் பிரிவினை என்பது, பெற்றோரின் இறப்புக்குப் பிறகு, பெற்றோரால் சம்பாதிக்கப்பட்ட சொத்துகளில் இருந்துதான் பங்கைப் பெற முடியும். அதிலும், அந்த பெற்றோர், தங்களது சொத்து குறித்து எந்த உயிலும் எழுதாதபட்சத்தில் மட்டுமே என்கிறது. 

கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.  அப்போது, இந்து திருமணச் சட்டப்பிரிவு 16 ( 3)ன் படி முறைதவறிய உறவில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் சம்பாதித்த சொத்தில் மட்டும்தான் உரிமை உள்ளதா? அல்லது பூர்வீகச் சொத்தில் உரிமை உள்ளதா? என்ற விசாரணையைத் தொடங்கியது.

அப்போது, 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், ஒரு தம்பதியரின் உறவை சட்டம் அங்கீகரிக்கவில்லையென்றாலும், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை, பெற்றோரின் உறவிலிருந்து சுயாதீனமாகப் பார்க்க வேண்டும் என்பதை இங்கே நீதிமன்றம் நினைவில் கொள்ள வேண்டும். இதன் மூலம், முறைதவறி பிறக்கும் குழந்தைகளுக்கும், திருமண உறவின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதுவே, இந்து திருமணச் சட்டப்பிரிவு 16 (3) திருத்தத்தின் முக்கிய அம்சமாகும் என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com