சென்னை தீவுத்திடலில் என்னென்ன வரப்போகிறது?

சென்னையின் மிக முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் தீவுத்திடலுக்கு சுற்றுலா பொருள்காட்சி நடக்கும் போது மக்கள் சென்று வந்திருப்பார்கள். 
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கா் நிலப்பரப்பில் நகா்ப்புற பொதுச் சதுக்கம் அமைப்பது குறித்து ஆய்வு செய்த அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கா் நிலப்பரப்பில் நகா்ப்புற பொதுச் சதுக்கம் அமைப்பது குறித்து ஆய்வு செய்த அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு

சென்னையின் மிக முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் தீவுத்திடலுக்கு சுற்றுலா பொருள்காட்சி நடக்கும் போது மக்கள் சென்று வந்திருப்பார்கள். 

அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் துப்பாக்கிப் பயிற்சி எடுக்கும் இடமாகவும், ஒரு காலத்தில் டேவிஸ் கோப்பைக்கான போட்டிகள் நடந்த பகுதியாகவும் இருந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

ஆண்டுதோறும் இங்கு நடக்கும் சுற்றுலா பொருள்காட்சி என்றால், சென்னை மக்களுக்கு கொள்ளைப் பிரியம். ஆண்டில் ஒரு சில மாதங்கள் மட்டுமே இங்கு சுற்றுலா பொருள்காட்சி நடக்கும் என்பதால், கூட்டம் நிரம்பி வழியும்

இந்த நிலையில்தான், சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.50 கோடி மதிப்பில் இயற்கை வனப்புடன் கூடிய நகா்ப்புற பொதுச் சதுக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, இங்கு தமிழக சுற்றுலா துறையால், சிப்பியைப் போன்ற கட்டட வடிவமைப்பில் நிரந்தர கண்காட்சி மையம், பட்டாம்பூச்சி கண்காட்சி, 18 ஏக்கரில் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடம், உணவகங்களைக் கொண்ட பகுதி, கடைகள், பொழுதுபோக்குப் பூங்கா என களைகட்டப்போகிறதாம்.

தீவுத்திடலின் இரண்டு பக்கங்களையும் இணைக்க நான்கு பாலங்கள் கட்டப்படுமாம். அதில் ஒன்று, லித்துவானியாவில் அமைந்திருப்பதைப் போன்ற கலைவேலைப்பாடுகளுடன் கூடியதாக இருக்கும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தளங்களுடன் 50 கடைகளைக் கொண்ட நிரந்தர கண்காட்சி மையம், நிகழ்ச்சிகளை நடத்த அரங்குகள் என அமையவிருக்கிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தப்  பணிகள் செய்து முடிக்கப்படவிருக்கிறதாம்.

இந்த இடம் உருவாக்கப்பட்டுவிட்டால், மெரினா கடற்கரையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் குவிவது தடுக்கப்படும் என்றும், வருடத்தில் ஒரே ஒரு முறை நடக்கும் பொருள்காட்சியின்போது ஒரே இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களுக்கு ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு வகையான பொருள்களை வாங்குவதற்கான சந்தையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொருள்காட்சி போன்றே, இங்கு அரசு மற்றும் தனியார் விற்பனையகங்கள் அமையவிருக்கின்றன.

இது குறித்து அமைச்சா் சேகா்பாபு கூறுகையில், சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் நகா்ப்புற பொதுச் சதுக்கம் அமைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்து சிஎம்டிஏ, சுற்றுலாத் துறை இணைந்து வெகுவிரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.

சென்னை தீவுத் திடலில் கூவமாற்றின் இருபுறமும் உள்ள 30 ஏக்கா் நிலப்பரப்பில் உலகத்தரத்தில் கண்காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் நகா்ப்புற சதுக்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்தப் பணிகள் முழுமை பெற்றப்பிறகு பெருமளவில் சென்னை மாநகர மக்களுக்கும், வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கும் பயன்படுகின்ற வகையில் இந்தப் பகுதி அமையும் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com