
இம்பால்: வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், தேர்வு மையங்களைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், மணிப்பூரில் நிலைமையை நேரில் ஆய்வு செய்து, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மணிப்பூர் மாணவர்களுக்கு மட்டும் ஒத்திவைப்பது குறித்து எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டி, மணிப்பூரில் தேர்வு மையங்களைக் கொண்ட மாணவர்களுக்கு மட்டும் பிறகு ஒரு நாளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புத் தொடர்பாக மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செல்லிடப்பேசியில் தானியங்கி தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 499 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வுக்கான நுழைவுச் சீட்டை பெற்றுள்ளனா். தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் போ் நீட் தோ்வு எழுதுவாா்கள் எனத் தெரிகிறது. அவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டும் 14,000 போ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் தோ்வு நடைபெற உள்ளது. மே 7-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தோ்வு நடைபெறும் என்றும், தோ்வு மையங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.