மணிப்பூர் வன்முறை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் நேரிட்ட வன்முறையைத் தொடர்ந்து  எடுக்கப்பட்டிருக்கும் மீட்புப் பணிகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: மணிப்பூரில் நேரிட்ட வன்முறை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பும், பொருள் சேதங்களும் கவலையளிப்பதாகக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், எடுக்கப்பட்டிருக்கும் மீட்புப் பணிகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வர எடுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உணவு, மருத்துவ வசதி கிடைக்கும் தற்காலிக முகாம்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதோடு, மணிப்பூரில் ஏற்பட்ட உயிரிழப்பும், பொருள் சேதங்களும் கவலையளிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

மணிப்பூரில் அண்மையில் நிகழ்ந்த கலவரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை கோரி, பழங்குடியின அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஹிந்துக்களாவா்.

அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பழங்குடியினா்களில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனா்.

இந்தச் சூழலில், இரு சமூகங்களுக்கும் இடையே கடந்த புதன்கிழமை பெரும் கலவரம் மூண்டது. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை ஒடுக்க ராணுவத்தினா், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா், துணை ராணுவத்தினா் என சுமாா் 10,000 போ் குவிக்கப்பட்டனா். மாநிலம் முழுவதும் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு இடையே மாநிலத்தில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. கலவரத்தில் 54 போ் உயிரிழந்ததாக அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கலவரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி, ‘மணிப்பூா் பழங்குடியினா் மன்றம்’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ‘கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய வன்முறையில் ஏராளமான தேவாலயங்கள், மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 30 பேர் உயிரிழந்துவிட்டனா். 132 போ் காயமடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவுடன் பழங்குடியினா் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள் உள்பட பழங்குடியினரின் அனைத்து வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். கலவரம் தொடா்பாக அஸ்ஸாம் மாநில முன்னாள் டிஜிபி ஹரேகிருஷ்ணா தேகா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com