
ராய்பூர்: தற்போதெல்லாம் திருமணத்துக்கு முன்பு, ப்ரீ-வெட்டிங் ஷூட் நடத்தி, புகைப்பட ஆல்பம் தயாரித்து, திருமணத்துக்கு முன் தங்களது நினைவலைகளை பதிவு செய்துகொள்ளும் முறை தொடங்கியிருக்கிறது.
ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில், இப்படி ஒரு ப்ரீ-வெட்டிங் ஷூட், நடக்கவிருந்த திருமணத்தையே மண்ணைப்போட்டு மூடியிருக்கிறது.
இரு வீட்டாரும், புதுமண ஜோடிக்கு திருமணம் செய்துவைத்தால் அது சரியாகப் போகாது என்று முடிவெடுத்து திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராய்பூரில் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரும் ப்ரீ-வெட்டிங் ஷூட்டுக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
மணப்பெண், நேராக மாநில மகளிர் ஆணையத்தை அணுகி, ப்ரீ-வெட்டிங் ஷூட்டில் எடுக்கப்பட்ட அனைத்துப் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களையும் நீக்கிவிட வேண்டும் என்றும், திருமணத்துக்காக தங்கள் குடும்பத்தினர் செலவிட்ட முழுத் தொகையையும் திருப்பியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்பினரையும் கலந்து பேசி மகளிர் ஆணையம் சுமூகமாக பிரிந்து செல்ல வாய்ப்பளித்தபிறகு, பெண் அளித்த புகாரும் திரும்பப்பெறப்பட்டது.