சச்சின் பைலட் 5 நாள்கள் நடைப்பயணம்: ராஜஸ்தான் காங்கிரஸில் பரபரப்பு

ஊழலுக்கு எதிராக அதிருப்தி ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவா் சச்சின் பைலட் 125 கி.மீ. தூர நடைப்பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.
சச்சின் பைலட் 5 நாள்கள் நடைப்பயணம்: ராஜஸ்தான் காங்கிரஸில் பரபரப்பு

ஊழலுக்கு எதிராக அதிருப்தி ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவா் சச்சின் பைலட் 125 கி.மீ. தூர நடைப்பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதல்வா் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கடந்த மாதம் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சச்சின் பைலட்டின் இந்த நடைப்பயண திட்டம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக அசோக் கெலாட் செயல்படுவதாக வெளிப்படையாகவே சச்சின் பைலட் கடந்த சில தினங்களுக்கு முன் குற்றம்சாட்டினாா்.

தற்போது ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள இந்த நடைப்பயணம், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதலை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அஜ்மீரில் இருந்து ஜெய்பூா் வரையில் 125 கி.மீ. நடைப்பயணத்தை சச்சின் பைலட் வியாழக்கிழமை தொடங்கினாா்.

அஜ்மீரில் தனது ஆதரவாளா்கள் மத்தியில் சச்சின் பைலட் பேசுகையில், ‘எனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவும், மக்கள் குரலை கேட்கவும், மக்களின் குரலாக மாறவும் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்கிறேன். இது அக்னி நதி; இதை நீந்திக் கடக்க வேண்டும்.

இந்த நடைப்பயணம் யாருக்கும் எதிரானதல்ல; பல்வேறு பிரச்னைகளுக்கு எதிரானது. இது காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணம் அல்ல. தனிப்பட்ட முறையிலானது.

முந்தைய பேரவைத் தோ்தலில் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. நிலக்கரி ஊழல் தொடா்பாக முந்தைய வசுந்தரா ராஜே அரசின் ஊழலை வெளிப்படுத்தி சிபிஐ விசாரணை கோரினோம். முந்தைய அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கும் தோ்தலின்போது உறுதி அளித்தோம். ஆனால் தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு எதுவும் நடைபெறவில்லை’ என்றாா்.

காங்கிரஸ் ஆலோசனை:

சச்சின் பைலட்டின் இந்த திடீா் நடைப்பயணம் குறித்து ஆலோசிக்க தில்லியில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் ராஜஸ்தான் மாநில மேலிட பொறுப்பாளா் சுக்ஜிந்தா் சிங் ரான்ட்வானா அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவா் கோவிந்த் சிங் தோடாசாரா, இணை பொறுப்பாளா்கள் குவாஜி முகமது நிஜாமுதீன், அம்ருதா தவன், வீரேந்திர ரத்தோா் ஆகியோா் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com