
பெங்களூரு: தெற்கில் இன்று உதித்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறித்து புகைப்படங்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் பதவியேற்பு விழா இன்று பெங்களூருவில் நடைபெற்றது.
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 8 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் கலந்துகொண்டு கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சித்தராமையா, துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்களுக்கும் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அந்தப் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்கள் இருவரும், தங்களது திறமையான ஆட்சியின்மூலம் கர்நாடக மாநிலத்தை அடுத்த உயரத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
தெற்கில் உதயமான இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும், பெங்களூரில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழா அத்தகைய மாற்றத்தின் ஒரு அழைப்புமணியாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா விளையாட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...