
நடிகர் சரத்பாபு (கோப்புப் படம்)
பிரபல நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு(71), சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“பல்துறை மற்றும் படைப்பாற்றல் மிக்க நடிகர் சரத்பாபு. அவரது நீண்ட திரை வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபல படைப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.”
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
“தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”