
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பார்க்க கர்நாடகத்திலுள்ள கல்லூரி நிர்வாகம் தங்கள் மாணவிகளுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதிப்சென் இயக்கத்தில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ஹிந்து பெண்கள் கட்டாயத்தின்பேரில் மதமாற்றம் செய்யப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரையிடலுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகத்திலுள்ள எஸ்.வி.எம். ஆயுர்வேத கல்லூரி தங்கள் மாணவிகளுக்கு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கட்டாயம் பார்க்க அறிவுறுத்தி இலவச டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது.
அதில், இளநிலை, முதுநிலை மாணவிகள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீனிவாசா திரையரங்குக்குச் சென்று தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம். அதற்காக பிற்பகல் வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து மாணவிகளும் கட்டாயம் படத்தைப் பார்க்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.