நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தில்லியில் புதிய நாடளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்துவைக்கிறார். அப்போது நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்படுகிறது. 

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் திருவாவடுதுறை ஆதீனத்தின் உதவியால் தயாரிக்கப்பட்ட செங்கோல், முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் 1947-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செங்கோல் குறித்து ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், 'குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று நாடாளுமன்றத்தை அவர் திறக்க வேண்டும் என கோருகிறார்கள். நாடாளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்யவேண்டும். மக்கள் பிரச்னைகளை பேசும் நாடாளுமன்றத் திறப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். மக்களுக்காகவாவது எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும். 

செங்கோலை வடிவமைத்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் கௌரவிக்க உள்ளார். திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை உள்பட 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதன் மூலம் தமிழுக்கும் தமிழருக்கும் பிரதமர் மோடி பெருமை சேர்க்கிறார். நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர். செங்கோல் வைப்பதில் எந்த அரசியலும் இல்லை. அடுத்த 100 ஆண்டுகளுக்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப்போகிறது' என்று பேசியுள்ளார்.

முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

இதனால் நாடளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்துவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com