கைப்பேசியை மீட்க அணையில் இருந்து 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சத்தீஸ்கர் அதிகாரி பணியிடை நீக்கம்

சத்தீஸ்கரில் அணையில் தவறி விழுந்த தனது கைப்பேசியை மீட்பதற்காக 41 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கரில் அணையில் தவறி விழுந்த தனது கைப்பேசியை மீட்பதற்காக 41 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டம், பக்கான்ஜோர் பகுதியில் மாநில அரசின் உணவு ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் அருகில் உள்ள பரால்கோட் அணைப் பகுதிக்கு கடந்த வார இறுதியில் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் தன் நண்பர்களுடன் சுயபடம் எடுக்க முயன்றபோது அவரது கைப்பேசி தவறி உபரி நீரைத் தேக்கி வைக்கும் சிற்றணையில்  விழுந்தது.

இதையடுத்து சிற்றணையில் இருந்து கைப்பேசியை மீட்பதற்காக ராஜேஷ் விஸ்வாஸ் கிராமவாசிகளை உதவிக்கு அழைத்து டீசல் பம்புகளைக் கொண்டு அதில் இருந்த நீரை வெளியேற்றினார். கைப்பேசியை மீட்கும் வரை சிற்றணையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை தகவல் தெரிய வந்ததைத் தொடர்ந்து அது குறித்து அறிக்கை அளிக்குமாறு காங்கேர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டார். 

மேலும் சிற்றணையில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்த நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஆர்.சி.திவாருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பக்கான்ஜோர் வட்டாட்சியர் அளித்த அறிக்கையில் கைப்பேசியைக் கண்டறிவதற்காக உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் சிற்றணையில் இருந்து 4,104 சதுர மீட்டர் அல்லது 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ராஜேஷ் விஸ்வாஸை ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்தார். அதற்கான உத்தரவில் 'தனது கைப்பேசியைக் கண்டறிவதற்காக உரிய உயரதிகாரியிடம் அனுமதி பெறாமல் ராஜேஷ் விஸ்வாஸ் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இந்தக் கோடைகாலத்தில் லட்சக்கணக்கான லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிற்றணையில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்த நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஆர்.சி.திவாருக்கு ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸில் 'ராஜேஷ் விஸ்வாஸ் சிற்றணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற தங்களின் வாய்மொழி உத்தரவை நாடியுள்ளார். உயரதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த அனுமதியை வழங்கியது தொடர்பாக தாங்கள் விளக்கமளிக்க வேண்டும். ஒரு நாளைக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் பிரியங்கா சுக்லா கூறுகையில் நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஆர்.சி.திவார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.  

இந்த விவகாரம் தொடர்பாக உணவு ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

பரால்கோட் அணைப் பகுதிக்கு நான் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அங்கு சுயபடம் எடுக்க முயன்றபோது எனது சாம்சங் கைப்பேசி தவறி சிற்றணையில் விழுந்தது. அங்கிருந்த உள்ளூர்வாசிகள் கூறுகையில் சிற்றணை வெறும் 10 அடி ஆழம் கொண்டது என்றும் கைப்பேசியை அதிலிருந்து மீட்க முடியும் என்றும் தெரிவித்தனர். 

முதலில் அவர்கள் கைப்பேசியை மீட்க முயன்றனர். எனினும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சிற்றணையில் இருந்து 3}4 அடி நீரை வெளியேற்றினால் கைப்பேசியை மீட்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து நீர்ப்பாசனத் துறை அதிகாரியிடம் நான் பேசினேன். சிற்றணையில் உள்ள நீரை விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என்பதால் நீங்கள் அதனை வெளியேற்றிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். 

அதன் பிறகு எனது செலவில் சிற்றணையில் இருந்து 3 அடி அளவுக்கு தண்ணீரை வெளியேற்றினேன். இதைத் தொடர்ந்து எனது கைப்பேசி வியாழக்கிழமை மீட்கப்பட்டது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com