மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா பதவியேற்பு

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா பதவியேற்பு


மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திங்கள்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என். பட்டேலின் பதவிக் காலம் நிறைவுபெற்றது முதல், பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா, பொறுப்பு ஆணையராக பதவிவகித்து வந்த நிலையில், இன்று ஆணையராக பதவியேற்றுள்ளார்.

பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா, அசாம் - மேகாலயா மாநிலத்திலிருந்து 1988-வது பிரிவைச் சேர்ந்த (ஓய்வுபெற்ற) ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை சிறப்புச் செயலாளர்  (ஒருங்கிணைப்பு), அமைச்சரவைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார்.

இந்தப் பதவியில் ஒருவர் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் பணியாற்றுவார் அல்லது, ஆணையராக பதவியேற்றவரின் 65வது வயதுவரை பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். தகவல் உரிமைச் சட்டத்தைக் காக்கும் மத்திய தகவல் ஆணையத்தைப் போலவே, இவ்விரு அமைப்புகளும் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த ஆணையகத்துக்கு அதிகபட்சமாக இரண்டு ஆணையர்கள் பதவி வகிப்பார்கள். தற்போது பதவியேற்றிருக்கும் ஸ்ரீவத்சவாவைத் தவிர்த்து, முன்னாள் புலனாய்வு துறை தலைவர் அரவிந்த் குமார் மற்றொரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com