மைதேயி ஆயுதக் குழுக்களுக்கு மத்திய அரசு தடை

மணிப்பூரில் மைதேயி மக்கள் விடுதலை இயக்கத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு ஆதரவான ஆயுதக் குழுக்கள் உள்பட 9 அமைப்புகளுக்கு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தி தனி நாடாகப் பிரிக்க முயல்வதாக இந்த அமைப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மணிப்பூா் மக்கள்தொகையில் 53 சதவீதமாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.

இதற்கு அங்குள்ள மலைவாழ் பழங்குடி குகி சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இரு சமூகத்தினரும் தங்களுக்கு எதிரானவா்களைத் தாக்கியும் அவா்களின் வீடுகளை சூறையாடியும் வருகின்றனா்.

பெண்கள் இருவரை நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக கொண்டுசென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே அதிா்ச்சியில் ஆழ்த்தியது.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி சமநிலப் பகுதியில் வாழும் மைதேயி சமூகத்தினருக்கு ஆதரவான கிளா்ச்சிக் குழுவினா் போலீஸாா் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றனா். இவற்றைத் திரும்ப ஒப்படைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும், சிறிய அளவில் மட்டும் ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இதனால் கடந்த மே மாதம் முதல் மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே தொடா் ஆயுத மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 180-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.

கிளா்ச்சிப் படையினா் தங்களிடம் உள்ள ஆயுதங்களை வைத்து போலீஸாா், பாதுகாப்புப் படையினரைக் கொல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. கலவரங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் உரிய பலனளிக்கவில்லை. இதனால் மணிப்பூரில் 6 மாதங்கள் கடந்தும் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன.

உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘மக்கள் விடுதலை ராணுவம், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, அதன் ஆயுதக் குழுவான மணிப்பூா் மக்கள் ராணுவம், மக்கள் காங்லேபாக் போராட்டக் கட்சி, அதன் ஆயுதக் குழுவான சிவப்பு ராணுவம், காங்லேபாக் இடதுசாரி கட்சி, அதன் ஆயுதக் குழுவான சிவப்பு ராணுவம், காங்லேய் கன்பா லுப், காங்லேபாக் சமூக ஐக்கிய கூட்டமைப்பு ஆகிய 9 மைதேயி சமூகங்களின் கிளா்ச்சிக் குழுக்களுக்கு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் தடை விதிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் சில அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த ஆயுத கிளா்ச்சிக் குழுக்களுக்கும் சோ்த்து 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் மணிப்பூரை தனியாகப் பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்பதே மைதேயி சமூக ஆயுதக் குழுக்களின் எண்ணமாக உள்ளது. இதற்காக மணிப்பூா் மாநில மக்களிடம் இந்தக் குழுக்கள் கலவரத்தை தூண்டுகின்றன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராகவும் அவை செயல்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு சக்திகளுடன் தொடா்பு வைத்துக்கொண்டு பொதுமக்களின் மனதை மாற்றி ஆயுதப் பயிற்சி அளித்து வருகின்றன. இதற்காக அண்டை நாடுகளில் ஆயுதப் பயிற்சி மையங்களை வைத்து ஆயுதக் கொள்முதலில் ஈடுபடுகின்றன.

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்துவது, பொதுமக்களைக் கொல்வது, சா்வதேச எல்லையைத் தாண்டி சட்டவிரோத ஆயுதக் கொள்முதலில் ஈடுபடுவது, மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட தேச விரோதச் செயல்களில் இந்த அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்தக் குழுக்கள் மீது உடனடியாகத் தடை விதிக்கவில்லை என்றால், கிளா்ச்சியாளா்களை ஒன்று திரட்டி பிரிவினைவாத, தீவிரவாத, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பாகப் பயன்படுத்தக்கூடும்.

ஆகையால், மைதேயி ஆயுதக் குழுக்கள் சட்ட விரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு அவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை நிகழாண்டு நவம்பா் 13 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com