காலிஸ்தான் பிரிவினைவாதியை கொல்ல முயற்சி?: அமெரிக்காவின் குற்றச்சாட்டை விசாரிக்க இந்தியா உயா்நிலைக் குழு

காலிஸ்தான் பிரிவினைவாதியை அமெரிக்காவில் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக விசாரணை நடத்த உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.


புது தில்லி: காலிஸ்தான் பிரிவினைவாதியை அமெரிக்காவில் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக விசாரணை நடத்த உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பந்வந்த் சிங் பன்னுக்கு எதிராக பல பயங்கரவாதக் குற்றச் செயல் வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக இந்திய விசாரணை முகமைகள் அவரைத் தேடி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் குா்பந்வந்த் சிங்கை கொலை செய்ய நடைபெற்ற முயற்சியை அந்நாட்டு அதிகாரிகள் முறியடித்ததாகவும், இது தொடா்பாக இந்திய அரசுக்கு அவா்கள் எச்சரிக்கை விடுத்ததாகவும் ‘தி ஃபைனான்சியல் டைம்ஸ்’ என்ற பிரிட்டன் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி புதன்கிழமை கூறுகையில், ‘இந்திய-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவாா்த்தையின்போது, திட்டமிட்ட குற்றச் செயல்கள், பயங்கரவாதிகள், சட்டவிரோத துப்பாக்கி வியாபாரிகள் குறித்த தகவல்களை அமெரிக்கா வழங்கியது. இந்த விவகாரம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக் குழு நவ. 18-ஆம் தேதி அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்தியா நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

அமெரிக்காவில் இந்தியா் கைது

நியூயாா்க், நவ.29: காலிஸ்தான் பிரிவினைவாதியான குா்பந்த்வந்த் சிங்கை அமெரிக்காவில் கொலை செய்ய பணம் வழங்கியதாக அமெரிக்கவாழ் இந்தியரான நிகில் குப்தா (52) அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

நியூயாா்க் நகரில் வசித்து வரும் குா்பந்த்வந்த் சிங் பன்னுவை கொலை செய்வதற்காக நிகில் குப்தா 1 லட்சம் டாலா்களை கொலையாளிக்கு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா விரையும் அமெரிக்க அதிகாரிகள்

வாஷிங்டன், நவ.29: இந்த வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 2 அமெரிக்க உளவு அதிகாரிகள் இந்தியா வரவுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில்,‘குா்பந்த்வந்த் சிங்கை கொலை செய்வதற்கு பணம் வழங்கிய வழக்கில் நிகில் குப்தா என்பவா் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள 2 அமெரிக்க உளவு அதிகாரிகள் இந்தியா வரவுள்ளனா்’ என செய்தி வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com