

புது தில்லி: புது தில்லியில் தலைமைக் காவலர் மோனிகா யாதவ் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையுண்டவரும், கொலை செய்தவரும், புது தில்லியின் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றியவர்கள். சுரேந்திர ரானா (42), மோனிகாவை (28) கொன்று, அவரது உடலை கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார். இந்த தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, கழிவுநீர் கால்வாயிலிருந்து ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சாலை என பொய் சொன்ன ஜிபிஎஸ்: ஆற்றில் மூழ்கி பலியான மருத்துவர்கள்
இதில் முதற்கட்ட விசாரணையில், மோனிகா உயிரோடு இருப்பது போன்ற ஒரு நாடகத்தை சுரேந்திரா அவரது குடும்பத்தினரிடம் உருவாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் உடந்தையாக இருந்த ராணாவின் சகோதரரும், நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது, மோனிகா தலைமைக் காவலராக இருந்துகொண்டே காவல் ஆய்வாளர் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு ராணா உதவிகளை செய்திருக்கிறார். பிறகு யுபிஎஸ்சி தேர்வெழுதவும் மோனிகா தயாராகி வந்துள்ளார்.
மோனிகா, ராணாவை ஒரு குருவாக நினைக்க, ராணாவோ, மோனிகாவை தன்னுடன் வாழும்படி வற்புறுத்தியிருக்கிறார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோனிகாவை கொலை செய்ய திட்டமிட்ட ராணா, அவரை புராரி புஷ்டாவுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு அவரது உடலை கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மோனிகாவின் சகோதரி காவல்நிலையத்தில் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கிறார். விசாரணையை ராணா திசை திருப்பி, மோனிகா எங்கோ உயிரோடு இருப்பது போன்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார்.
சகோதரி மாயமானது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், காவல்துறை ஆணையரை அணுகினார் மோனிகாவின் சகோதரி. இதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படுகிறது.
அதாவது, ராணா, மோனிகா தனது உறவினரை காதலித்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், அவர்கள் நன்றாக இருப்பதாகவும் விசாரணையிலும், மோனிகாவின் குடும்பத்தினரிடமும் கூறியுள்ளார். மோனிகா உயிரோடு இருக்கும் போது பேசிய வாய்ஸ் ரெக்கார்டுகளை, குடும்பத்தினருக்குப் போட்டுக்காட்டியுள்ளார்.
மோனிகாவின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, அவர் பணம் எடுத்து, மோனிகா உயிரோடு இருப்பதைப் போல நடித்துள்ளார். அது மட்டுமல்ல, மோனிகா கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது போல போலி சான்றிதழ் கூட தயாரித்துள்ளார்.
இதற்கிடையே, மோனிகா காணாமல் போனது குறித்து விசாரித்த குற்றவியல் பிரிவு, மோனிகாவின் குடும்பத்தினருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் செல்லிடப்பேசி எண்கள் யாருடையது என்று விசாரித்தபோது, அதில் ரவீன் என்பவரின் பெயர் கிடைக்கிறது. அவரிடம் விசாரித்த போது, அனைத்தையும் செய்தது ராணா என்பது தெரிய வந்து, ராணாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
மோனிகாவின் உடலை வீசிய இடத்திலிருந்து காவல்துறையினர் எலும்புக்கூடு ஒன்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.