பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?

வந்தே பாரத் ரயில் சேவையில், வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?


புது தில்லி: வந்தே பாரத் ரயில் சேவையில், வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

வரும் 2024ஆம் ஆண்டு படுக்கை வசதி கொண்ட ரயில்பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் மும்முரமாகத் தொடங்கவிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியின் மாதிரி தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ரயில் பெட்டி, அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டிக்குள் போதுமான இடைவெளி, மேல் படுக்கைக்குச் செல்வதற்கு வசதியான ஏணிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட வந்தேபாரத் படுக்கை வசதிகொண்ட முதல் ரயிலின் மாதிரியில் 857 படுக்கை வசதிகளுடன் இருக்கின்றன. அவற்றில் 823 படுக்கை வசதிகள் பயணிகளுக்கானது. மற்றவை ஊழியர்களுக்கானது. ஒவ்வொரு ரயில் பெட்டியும் நான்குக்கு பதிலாக மூன்று கழிப்பறைகள் மற்றும் ஒரு சிறிய உணவகத்துடன் இருக்கும்.

தற்போது, இதுபோன்ற 10 ரயில் பெட்டிகளை சென்னை  ஐசிஎஃப் தொழிற்சாலைக்காக, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஇஎம்எல் தயாரித்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் இருக்கை வசதியுடன் 33 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது தயாரிப்புப் பணிகள் முடிந்ததும், 75 இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

இந்திய ரயில்வே, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் ஒரு தாழ்தள ஏறும் வசதி அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வசதி விரைவில் வந்தே பாரத் ரயிலிலும் ஏற்படுத்தப்படும். பிறகு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சக்கர நாற்காலி உதவி தேவைப்படின் அதனை பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதன் மூலம்  ரயில் நிலையங்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணி எந்த ரயில் நிலையத்தில் ஏறவிருக்கிறாரோ அந்த ரயில் நிலையத்தில் தாழ்தள ஏறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com