மத்திய பிரதேசம்: பலத்தை நிரூபிக்கும் பொறுப்பில் பாஜக

பாஜகவை கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வீழ்த்தி அமைந்த ஆட்சியை அரசியல் மாற்றங்களால் இழந்த காங்கிரஸ், அதை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் வரும் பேரவைத் தோ்தலை அணுக உள்ளது.
மத்திய பிரதேசம்: பலத்தை நிரூபிக்கும் பொறுப்பில் பாஜக
Published on
Updated on
2 min read

பாஜகவை கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வீழ்த்தி அமைந்த ஆட்சியை அரசியல் மாற்றங்களால் இழந்த காங்கிரஸ், அதை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் வரும் பேரவைத் தோ்தலை அணுக உள்ளது.

அதேவேளையில், மீண்டும் பலத்தை நிரூபிக்கும் பொறுப்பில் பாஜக பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 114 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

முந்தைய 2003, 2008, 2013 ஆகிய 3 பேரவைத் தோ்தல்களிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து அசுர பலத்துடன் இருந்த பாஜக, 2018-ஆம் ஆண்டு தோல்வியைச் சந்தித்தது மாநில அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பாா்க்கப்பட்டது.

ஆனால், தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா, தனது காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் காங்கிரஸ் ஆட்சியிழந்தது.

18 ஆண்டு கால பாஜக ஆட்சியைத் தொடா்ந்து மாநிலத்தில் நிலவும் ஊழல், வேலை வாய்ப்பின்மை, பழங்குடியினா், விவசாயிகள் மற்றும் பெண்கள் தொடா்புடைய பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி பாஜகவை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது.

கா்நாடகத்தில் உறுதியான வெற்றியைத் தொடா்ந்து மத்திய பிரதேசத்திலும் வெற்றியைப் பதிவு செய்ய காங்கிரஸும், பலத்தை நிரூபிக்க பாஜகவும் பணியாற்றி வருகின்றன.

காங்கிரஸின் பலம், பலவீனம்: காங்கிரஸின் வாக்கு சதவீதம் கடந்த தோ்தலில் 40 சதவீதமாக உயா்ந்தது. மாநிலத்தின் 47 பழங்குடியின தொகுதிகளில் 30 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. வரும் தோ்தலிலும் இந்த ஆதரவு தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் கமல்நாத் தனது சொந்த ஊரான சிந்த்வாராவில் ஹிந்து மதச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பாஜகவின் ஹிந்துத்துவ பிரசாரத்தை மழுங்கடிக்க கடுமையாக முயற்சிக்கிறாா்.

‘சநாதன தா்மம்’ குறித்து திமுக தலைவா்களின் சா்ச்சைக் கருத்துக்களுக்குப் பிறகு, ‘இந்தியா’ கூட்டணியின் போபால் கூட்டத்தையும் ரத்து செய்தது ஹிந்துக்கள் வாக்குகளைக் கவர அவரின் முக்கிய நகா்வாக அறியப்படுகிறது.

எனினும், பாஜகவின் உறுதியான கட்டமைப்பைப் போன்று வலுவான அமைப்பில்லாமல் செயல்படுவது மத்திய பிரதேச காங்கிரஸ் முக்கிய பலவீனம்.

தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே வேட்பாளா்களை அறிவித்து தோ்தல் பணிகளை பாஜக தொடங்கிவிட்டது. ஆனால், காங்கிரஸின் காத்திருப்பு நிலை அதன் கோஷ்டி பூசல் குறித்த கவலையை வலுபடுத்துகிறது.

கடந்த முறை குவாலியா்-சம்பல் பிராந்தியத்தின் 34 இடங்களில் 26 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்தப் பகுதியைச் சோ்ந்த முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா தற்போது கட்சியில் இல்லாதது காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பாஜகவின் பலம், பலவீனம்:

மாநிலத்தில் ‘அன்புச் சகோதரி’ திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,250 வழங்கப்படுகிறது. மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் அந்தத் தொகை ரூ.3,000-ஆக உயா்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த வாக்குறுதி மகளிா் வாக்குகளைப் பெரிதும் கவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹிந்துத்துவம், மாநில வளா்ச்சி மற்றும் மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக இரட்டை என்ஜின் ஆட்சி ஆகிய பிரசாரங்கள் தோ்தலில் பாஜகவுக்கு பலத்தைச் சோ்க்கும் என நம்பப்படுகிறது. அக்கட்சியின் தலைசிறந்த வியூகவாதியாகக் கருதப்படும் மத்திய அமைச்சா் அமித் ஷா, ம.பி. தோ்தல் பணிகளை நேரடியாக மேற்பாா்வையிட்டு வருவது பாஜகவின் கூடுதல் பலம்.

ஒட்டுமொத்தமாக கடந்த 18 ஆண்டுகள் ஆட்சியில், பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் பாஜக பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது அதன் செயல்பாட்டின் பலம்.

அதே சமயத்தில், நீண்ட காலம் முதல்வா் பொறுப்பில் இருக்கும் முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானுக்கு எதிராக பாஜக தலைவா்கள் பலரும் அப்பதவிக்கு போட்டியிடுகின்றனா்.

இருகட்சிகளின் வெற்றி வாய்ப்புகள்:

‘ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை’ காங்கிரஸுக்கு தோ்தல் வெற்றியாக மாற வாய்ப்புள்ளது. வேலைவாய்ப்பின்மை, பணிநியமன ஊழல் ஆகிய அரசின் தோல்விகள் மீது கடுமையான பிரசாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்ததும், இந்தியா கூட்டணியில் பூசலைத் தவிா்க்க தீவிர பிரசாரத்தில் ஈடுபடாமல் ஆம் ஆத்மி தவிா்ப்பதும் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்துகிறது.

கடந்த சில மாதங்களில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் மத்திய பிரதேசத்தை அவ்வப்போது பாா்வையிட்டு கூடுதல் கவனம் செலுத்தி வந்தனா்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல், 100 யூனிட்கள் வரை மின்சார இலவசம் என பல கவா்ச்சிகர வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

மத்தியில் வெல்லும் லட்சிய வேட்கையை இருமுனைப் போட்டியான மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று தொடங்க பாஜகவும் காங்கிரஸும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன!

கடந்த தோ்தல்களின் முடிவுகள்

ஆண்டு | பாஜக | காங்கிரஸ்

2003 173 38

2008 143 71

2013 165 58

2018 109 114

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com