

மகாராஷ்டிரத்தில் 511 திறன் மேம்பாட்டு மையங்களை நாளை மாலை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் பெயரில் மாநிலத்தின் 34 கிராமப்புற மாவட்டங்களில் இந்த திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டங்களை நடத்தும்.
ஒவ்வொரு மையங்களிலும், இரண்டு தொழிற்கல்வி படிப்புகளில் சுமார் 100 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தொழில் பங்குதாரர்கள் மற்றும் முகவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநிலத்தின் 28 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் இதுவரை திறன் மேம்பாட்டு மையங்கள் இல்லை. இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி மிக முக்கியமாகக் கருதப்படுவதால் மாநிலம் முழுவதும் தொடங்க முடிவு செய்துள்ளதாக தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்தார்.
இந்த திறன் மேம்பாட்டு மையங்கள் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்க உதவும். எதிர்காலத்தில் இதுபோன்ற மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.