
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் தசரா கொண்டாட்டத்தின்போது நடந்த பாரம்பரிய தடியடி திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கர்னூல் மாவட்டத்தின் மலைப்பகுதியில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் மல்லம்மா மற்றும் மல்லேஸ்வர சுவாமிக்கு திருமண வைபவம் நடைபெறும்.
வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தங்கள் சிலைகளின் பாதுகாப்பிற்காக தடிகளை ஏந்தி சண்டையிடுவார்கள். அவ்வாறு நேற்று இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டையால் கொடூரமாக தாக்கிக் கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருப்பினும், பக்தர்கள் இந்த காயங்களை ஒரு நல்ல சகுனமாக கருதுகின்றனர்.
அந்த பகுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தடியடி திருவிழாவை நிறுத்த பல ஆண்டுகளாக போலீஸார் முயற்சித்து வருகின்றனர். தடியடியை நிறுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும், எந்த பலனும் இல்லை, போலீஸாரின் கட்டளைகளை மீறி கிராம மக்கள் இந்த தடியடி சண்டைகளை ஏற்பாடு செய்கிறார்கள்.
சிவபெருமான் பைர அவதாரம் எடுத்து மணி மற்றும் மல்லசுரன் ஆகிய இரு அரக்கர்களைத் தடியால் அடித்ததாகவும், அதனை வருடம்தோறும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று இந்த வினோத திருவிழாவை அரங்கேற்றுகின்றனர். இது அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்.
இந்த பாரம்பரிய சண்டையை காண கர்னூலின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், தெலங்கானா, கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிராமத்தில் கூடுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.