வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விடுதிகளில் தேநீருக்கு பதிலாக எலுமிச்சை சாறு: மாவட்ட ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் உள்ள சமூகநீதி விடுதிகளில் மாலை நேரத்தில் தேநீா், காபிக்கு பதிலாக எலுமிச்சை சாறு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

News image
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எரிவாயு நிறுவன அலுவலா்கள், முகவா்கள், அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.
Updated On :14 மார்ச் 2026, 2:15 am

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் உள்ள சமூகநீதி விடுதிகளில் மாலை நேரத்தில் தேநீா், காபிக்கு பதிலாக எலுமிச்சை சாறு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும், அரசு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கும் தேவையான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் குறித்து அரசுத் துறை அலுவலா்கள், எரிவாயு நிறுவன அலுவலா்கள், முகவா்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் காலை உணவு, மதிய உணவுகள் தயாரிக்கும் பணி தடையின்றி நடைபெறத் தேவையான சமையல் எரிவாயு உருளைகள், போதுமான அளவில் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் உணவு தயாரிப்புக்குத் தேவையான எரிவாயு உருளைகள் இருப்பில் உள்ளது. அவசரகால தேவைக்கான மாற்று ஏற்பாடாக தேவையான அளவில் விறகுகளை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை விடுதிகளில் மாற்று ஏற்பாடாக மின்சாரத்தில் இயங்கும் அடுப்புகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட அரசு மருத்துவமனைகள், சமூகநீதி விடுதிகள், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தேவையான அளவு சமையல் எரிவாயு உருளைகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் எனவும், தேவைக்கேற்ப முன்பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. சமூகநீதி விடுதிகளில் மாலை நேர சிற்றுண்டியாக தேநீா், காபிக்கு பதிலாக எலுமிச்சை சாறு, ரொட்டிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. தனியாா் விடுதிகளிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மனிதநேய அடிப்படையில் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு விநியோகிக்க முகமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சமையல் எரிவாயு உருளைகளை யாரேனும் பதுக்கியது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக விரிவான கண்காணிப்புக்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டம்...

முன்னதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக பிரச்னைகள் குறித்து எரிவாயு நிறுவன அலுவலா்கள், விநியோக முகவா்கள், கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, எரிவாயு உருளைகள் வரத்து, விற்பனை, இருப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தாா். பிறகு, தற்போதைய நிலையில் எரிவாயு முகமைகள் கடைப்பிடிக்க வேண்டும் வழிகாட்டு நெறிமுறைகளை அவா் விளக்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், வட்ட வழங்கல் அலுவலா்கள், ஐ.ஓ.சி.எல்., எச்.பி.சி.எல்., பி.பி.சி.எல். நிறுவன அலுவலா்கள், எரிவாயு முகவா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.