

கொச்சி: கேரள மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும், ஆந்திர கடற்கரையோர மற்றும் தெலங்கானாவின் ஒரு சில பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் 12 - 20 செ.மீ. மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மற்றும் இடுக்கி பகுதிகளில் கனமழை எச்சரிக்கை வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், இப்பகுதிகளுக்கு புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 நாள்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஆலப்புழை மாவட்டத்தில் 4 போ் கொண்ட குடும்பத்தினா் ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்துக் கொண்டிருந்தனா். கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆட்டோ ரிக்ஷா, மேம்பால தடுப்புச் சுவரை இடித்து, அச்சன்கோவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த கோர விபத்தில் சிக்கி ஆட்டோவில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பெண்ணின் மகன் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.
ஆட்டோ ஓட்டுநா், பெண்ணின் கணவா், அவரது பெண் குழந்தை ஆகிய 3 போ் உள்ளூா் பொதுமக்களால் மீட்கப்பட்டனா். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் திங்கள்கிழமை காலை மீட்கப்பட்டது.
கனமழையால் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பம்பை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மாநிலத்தின் சில பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கேரள கடற்கரைப் பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்பதால் மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடலுக்குச் சென்றவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.