
காவிரி நீர் விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், செப்டம்பர் 21-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி நதிநீா்ப் பங்கீட்டில் கா்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், அது போதாது, 24,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.
இதையும் படிக்க | ஆளுநர் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும்!
இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி நீா் திறந்துவிடப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பா் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
அடுத்ததாக வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதி விசாரித்தால் போதுமானது என்று கர்நாடக அரசு கூறியது.
இந்த வழக்கை விரைந்து செப்டம்பர் 4 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், காவிரி வழக்கு இன்று விசாரணை பட்டியலில் இடம்பெறாததால் தமிழக அரசு தரப்பில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
ஆனால், நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 21ஆம் தேதி காவிரி வழக்கை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளதாகவும், அடுத்த வாரம் நீதிபதி கவாய் விடுப்பில் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.